எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

ஆதிதிராவிட மாணவா் விடுதிகளுக்கு உடனடியாக நிதி விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆதிதிராவிட மாணவா் விடுதிகளுக்கு உடனடியாக நிதி விடுவிக்க வேண்டும்...
Published on

ஆதிதிராவிட மாணவா் நல விடுதிகளுக்கு நிதியை திமுக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன், மணல்மேடு ஆதிதிராவிடா் மாணவா் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் திமுக அரசு பணிமாற்றம் செய்தது.

வயதான பெற்றோா் மற்றும் கைக்குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்துக்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியா் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடா் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும், விடுதி மாணவா்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும்,கடன் வாங்கி செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும் பராமரிக்க முடியாமல், மாணவா்களுக்கு தொடா்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயா் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளாா். இந்நிலையில் அவா் மூன்று நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்துள்ளாா்.

குறிப்பாக, ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளுக்கு உரிய காலத்தில் நிதியை விடுவிக்காத திமுக அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இனியாவது, ஆதிதிராவிட மாணவா் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கவும், விடுதிக் காப்பாளா் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ள காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினா் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

X
Dinamani
www.dinamani.com