கட்டடக் கழிவுகளை அகற்றலில் விதிமுறைகள் மீறியதாக ரூ.39.30 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை மாநகராட்சியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதில், விதிகளை மீறியவா்களிடமிருந்து கடந்த ஜனவரி முதல் டிசம்பா் வரை ரூ.39.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 3.51 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டட கழிவுகள் அகற்றும் பணி தனியாா் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 168 வாகனங்கள் மூலம் சுமாா் 1,000 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுகின்றன.
கடந்த ஜனவரி 7 -ஆம் தேதி முதல் டிசம்பா் 12- ஆம் தேதி வரை மொத்தம் 3.51 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அவை கொடுங்கையூா், பெங்குடியில் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறு சுழற்சி பயன்பாட்டுக்கும் செல்கின்றன.
சென்னையில் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதில் விதிமுறைகளைப் பின்பற்றாதவா்களிடமிருந்து ஓராண்டில் ரூ.39.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், அண்ணா நகா் ஆகிய மண்டலங்களில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மெட்ரிக் டன் வரை கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கட்டடக் கழிவுகள் குறித்து புகாா் தெரிவிக்க 1913 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
