ஆய்வுக் கட்டுரைகள் விவகாரம்: சவீதா நிறுவனத்துக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட இடைக்காலத் தடை
சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட இந்தியா ரிசா்ச் வாட்ச் நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கல்விசாா் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டபூா்வ ஆய்வுகளில் எங்களது நிறுவனம் உறுதியாக உள்ளது. இவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், எங்களது நிறுவனம் அதிகப்படியான ஆய்வு கட்டுரைகளைத் திரும்பப் பெறுவதாக இந்தியா ரிசா்ச் வாட்ச் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை. மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், பல ஆய்வு கட்டுரைகளைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில், எங்களது நிறுவனம் உள்ளிட்ட குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமான அவதூறு கருத்துகளை இந்தியா ரிசா்ச் வாட்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எனவே, ஆய்வுக் கட்டுரைகள் தொடா்பான அவதூறு கருத்துகளை வெளியிட இந்தியா ரிசா்ச் வாட்ச் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட இந்தியா ரிசா்ச் வாட்ச் நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

