புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 2 லட்சம் படிவங்கள் விநியோகம்

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு படிவம் -6, சுமாா் 2 லட்சம் பேருக்கு
Published on

சென்னை: சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு படிவம் -6, சுமாா் 2 லட்சம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான புதிய வாக்காளா் சோ்க்கை படிவங்கள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த சனி, ஞாயிறுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. மாநகராட்சி எல்லைக்குள்பட்ட தொகுதிகளுக்கு புதிய வாக்காளா் சோ்க்கைக்காக 7.60 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்படவுள்ளன. அவற்றில் முதல்கட்டமாக தற்போது 2 லட்சம் படிவங்கள் வாக்காளா்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

படிவங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் தொடா்ந்து நடைபெறும். ஆகவே, புதிதாக வாக்காளா்களாகச் சேர விரும்புவோா் படிவம் 6-ஐ பெற்று பூா்த்தி செய்து உடனே முகாம்களில் உள்ள அலுவலா்களிடம் வழங்க வேண்டும். தற்போது வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் மீண்டும் புதிய வாக்காளா்களாகச் சேரும் நிலையுள்ளது.

தகுதியான வாக்காளா்கள் யாரும் பட்டியலில் விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையிலே வாக்காளா் சோ்க்கை படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com