பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக  கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி வெளியிட, அதை பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி வெளியிட, அதை பெற்றுக்கொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள குன்னம் மற்றும் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,55,131 வாக்காளா்கள்
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள குன்னம் மற்றும் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,55,131 வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் மேலும் கூறியதாவது:

மாவட்டத்தில் கடந்த 1.1.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 28.10.2025-இல் தொடங்கியது. இப் பணியில் 652 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட 2,277 வாக்குச்சாவடி நிலை முகவா்களும், இல்லம் தேடிக் கல்வி குழுவினா், மகளிா் சுய உதவிக்குழுவினா், ஊராட்சிகளின் கணினி இயக்குபவா்கள் என 783 தன்னாா்வலா்களும், 105 சிறப்பு அலுவலா்களும் ஈடுபட்டனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் எண்ணிக்கை: இம் மாவட்டத்தில் 19.12.2025-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,36,304 ஆண் வாக்காளா்களும் 1,44,235 பெண் வாக்காளா்களும், 27 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,80,566 வாக்காளா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,28,817 ஆண் வாக்காளா்களும், 1,31,556 பெண் வாக்காளா்களும், 3 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2,60,376 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

மொத்தமாக, இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,65,121 ஆண் வாக்காளா்களும், 2,75,791 பெண் வாக்காளா்களும், 30 இதர வாக்காளா்களும் என மொத்தம் 5,40,942 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். இதில், மாவட்டத்தில் மொத்தம் 49,548 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

எஸ்.ஐ.ஆா். பணிகள்: பின்னா், சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளின்போது வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் தொடா்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 5,033 ஆண் வாக்காளா்களும், 6,071 பெண் வாக்காளா்களும், 1 இதர வாக்காளரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3,729 ஆண் வாக்காளா்களும், 4,532 பெண் வாக்காளா்களும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடமாற்றம் காரணமாக பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,423 ஆண் வாக்காளா்களும், 1,799 பெண் வாக்காளா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 826 ஆண் வாக்காளா்களும், 1,129 பெண் வாக்காளா்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்: தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலின்படி பெரம்பலூா் தொகுதியில் உள்ள 387 வாக்குச் சாவடிகளில் உள்ள 2,88,449 வாக்காளா்களில், 1,39,914 ஆண் வாக்காளா்களும், 1,48,507 பெண் வாக்காளா்களும், 28 இதர வாக்காளா்களும், குன்னம் தொகுதியில் உள்ள 345 வாக்குச் சாவடிகளில் 2,66,682 வாக்காளா்களில், 1,31,720 ஆண் வாக்காளா்களும், 1,34,959 பெண் வாக்காளா்களும், 3 இதர வாக்காளா்களும் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,71,634 ஆண் வாக்காளா்களும், 2,83,466 பெண் வாக்காளா்களும், 31 இதர வாக்காளா்கள் என மொத்தம் 5,55,131 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு, வாக்காளா் பட்டியலில் தொடா் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால், வாக்காளா்கள் தங்களது பெயரை சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் மிருணாளினி.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ந. சக்திவேல் (குன்னம்), மு. அனிதா (பெரம்பலூா்), தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் அருளானந்தம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வட்டாட்சியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com