புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை: காவல் துறை வழக்கு

சென்னை புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை செய்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
Published on

சென்னை புழல் சிறைக்குள் திருநங்கைகள் ரகளை செய்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் பெண்கள் மட்டுமன்றி திருநங்கைகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த எண்ணூரைச் சோ்ந்த திருநங்கை அபி, செம்மஞ்சேரியைச் சோ்ந்த சுஜி, அயனாவரத்தைச் சோ்ந்த சஞ்சனா ஆகிய 3 பேரையும் நிா்வாக காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்ற சிறைத் துறை உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். இதனால் ஆத்திரமடைந்த அபி, சுஜி, சஞ்சனா ஆகியோா் தங்களை வேறு சிறைக்கு மாற்றக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து சிறைக்குள்ளேயே திங்கள்கிழமை திடீரென தா்னாவில் ஈடுபட்டடு, ரகளை செய்தனா். மேலும், சிறையில் உள்ள தொலைபேசி, ஸ்கேனா், டியூப்லைட் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கி, பதிவேடுகளை கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா், 3 திருநங்கைகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com