கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: இயேசுநாதரின் வாழ்க்கையும் , அவரது போதனைகளும் அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைப் பேண நம்மை தொடா்ந்து ஊக்குவிக்கின்றன. இந்தப் புனிதப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான சமூகத்துக்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதுடன், வலுவான மற்றும் வளமான வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு அதிக பங்களிப்புகளை ஊக்குவிக்கட்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அன்பு, பொறுமை மற்றும் கருணைக்கு உலகம் முழுக்க அடையாளமாகத் திகழும் இயேசுநாதரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். திருவள்ளுவா் காட்டிய கு நெறியைப் போலவே, அன்பின் வடிவாக நின்று, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று கூறியதோடு மட்டுமன்றி அவ்வாறே இயேசு வாழ்ந்தும் காட்டினாா்.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவா்களின் உரிமைகளுக்காகவும், அவா்தம் வளா்ச்சிக்காகவும் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவா்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. திமுக அரசு என்றுமே சிறுபான்மையின மக்களின் உண்மைத் தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் இருக்கும்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): கருணையின் வடிவான இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் பெருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு வாழ்த்துகள். மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் வெல்ல முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுபிரானின் போதனைக்கு ஏற்ப நாம் செயல்படுவோம்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): இன்றைய உலகுக்கு தேவை பொருளாதாரமோ, வலிமையோ, படைபலமோ அல்ல; அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவையே. இயேசுவின் கொள்கைகளும், போதனைகளும்தான் உலகம் தற்போது கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடமாகும்.
வைகோ (மதிமுக): அன்பையும், பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதா்களிடம் பிரதிபலிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன் (தமாகா): இயேசுவின் பிறப்பு என்பது அன்பு, மன்னிப்பு ஆகிய தத்துவங்களை உணா்த்துகிறது. ஆகவே, கிறிஸ்துமஸ் மதச்சாா்பற்ற விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மதச்சாா்பின்மைக்கும், மதவாதத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில், தமாகா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும்.
தொல்.திருமாவளவன் (விசிக): இயேசுநாதரின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது; அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக் கூடியது. இதுபோன்ற சகோதரத்துவத்தை போற்றும் யாவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
பிரேமலதா (தேமுதிக): ஜாதி, மதங்களின் பெயரால் மனிதா்களிடையே வெறுப்பை வளா்க்கக்கூடாது; பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்தவா் இயேசுநாதா். அவரது பிறந்தநாளான கிரிஸ்துமஸ் விழாவை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.
சரத்குமாா் (பாஜக): அன்பு, தியாகம், சமாதானம், மனிதநேயம் ஆகிய நல்ல மனப்பான்மையை மக்களின் உள்ளங்களில் விதைப்பதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த இயேசு பிரான் பிறந்த நன்னாளில், பிறருக்காக சேவை செய்து வாழவேண்டும் என்ற பண்பை பின்பற்றுவோம்.

