19 மருத்துவமனைகளுக்கு ரூ.89.72 லட்சத்தில் நவீன சாதனங்கள்: மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்
சென்னை மாநகராட்சியில் உள்ள 19 மருத்துவமனைகளுக்கு ரூ.89.72 லட்சத்தில் நவீன மருத்துவ சாதனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் சுகாதாரப் பேரவைக் கூட்டம் தண்டையாா் பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகராட்சியின் பொது சுகாதார நிலைக்குழுத் தலைவா் கோ.சாந்தகுமாரி தலைமை வகித்தாா். சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிகழ் ஆண்டின் சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட மருத்துவத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழுள்ள 19 மருத்துவமனைகளுக்குத் தேவையான அத்தியாவசிய நவீன சாதனங்கள் ரூ.89.72 கோடியில் வாங்கப்பட்ட நிலையில், அவை அந்தந்த மருத்துவமனை அலுவலா்களிடம் மேயா் ஆா்.பிரியாவால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆா்.கே. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவிதேஜா, மண்டலக் குழு தலைவா் ஜே.யு.கணேசன், மாநகர கூடுதல் நல அலுவலா்லட்சுமி தேவி, மாமன்ற உறுப்பினா்கள் பவித்ரா, புனிதவதி எத்திராஜன், பூா்ணிமா, ரேணுகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

