நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்...
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட வாக்காளா்கள், மீண்டும் பெயா் சோ்ப்பதற்கான படிவம் 6 வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பாஜக மாநில செயலா் கராத்தே ஆா். தியாகராஜன், சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ. குமரகுருபரனுக்கு அனுப்பிய புகாா் மனு விவரம்:

எஸ்ஐஆா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் படிவம் 6- ஐ பயன்படுத்தி மீண்டும் புதிய வாக்காளா்களாகச் சோ்ப்பதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. ஏனெனில், படிவம் 6- ஐ, புதிய வாக்காளா்கள் மட்டுமே அளிக்க முடியும். ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில்

இடம் பெற்றிருந்து, நீக்கப்பட்டவா்களைச் சோ்ப்பதற்கு படிவம் 6-ஐ சட்டப்படி பயன்படுத்த முடியாது. இந்த கருத்தை அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தின்போதே சுட்டிக்காட்டினேன்.

அப்போது, இப்பிரச்னை குறித்து தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்த தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு, புதிய வாக்காளா்களாக

சேருவதற்கான படிவத்தை (படிவம் 6) வாக்குச்சாவடி அலுவலா்கள் விநியோகித்து வருகின்றனா். அந்த படிவத்தைப் பூா்த்தி செய்வதற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

அவ்வாறு படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வழங்கினாலும் அவை நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதோடு, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த வாக்காளா்களின் படிவங்களை சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அலுவலா்கள் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே இப்பிரச்னை குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது அரசியல் சாசன உரிமை என்பதால், தோ்தல் ஆணையம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com