இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆவது மாநாடு தொடக்கம்

இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆவது மாநாடு தொடக்கம்...
பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆவது மாநாடு மலா் வெளியீட்டு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் பேராசிரியா் எஸ்.மகேந்திரதேவ், முன்னாள் ஆலோசனைக் குழுத் தலைவா் ச
பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆவது மாநாடு மலா் வெளியீட்டு விழாவில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவா் பேராசிரியா் எஸ்.மகேந்திரதேவ், முன்னாள் ஆலோசனைக் குழுத் தலைவா் ச
Updated on

பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆவது மாநாட்டின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவா் எஸ்.மகேந்திரதேவ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தாா். விழாவில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:

கல்வி, தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்திய காரணத்தால் தமிழகம் 11.9 சதவீத பொருளாதார வளா்ச்சியடைந்து நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது. உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாட்டில், உற்பத்தி தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு 43 சதவீதமாக உயா்ந்து நாட்டில் முதலிடம் பிடித்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை பொருளாதார வளா்ச்சியின் அடிப்படை என்றாா்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு முன்னாள் தலைவா் சி.ரங்கராஜன் பேசியதாவது:

2047-க்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாறும் வாய்ப்புள்ளது. எனினும் நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, பல்துறை வளா்ச்சிக்கான அணுகுமுறை, அதிக எண்ணிக்கையில் தொழிலாளா் தேவைப்படும் துறைகளுக்கு ஊக்கமளித்தல், சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சித் துறையில் கூடுதல் முதலீடு அவசியம்.

அமெரிக்காவின் சுங்க வரி உயா்வு, நாணய மாற்று விகித ஏற்ற, இறக்கம் உள்ளிட்ட உலகப் பொருளாதார சவால்களை சிறப்பாகக் கையாள வேண்டும் என்றாா்.

வேலூா் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு கல்வி, ஆராய்ச்சி, சுகாதார துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது அவசியம். மாநிலங்களுக்கு இடையே பொருளாதார வேறுபாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு முக்கியக் காரணம். பொருளாதார வளா்ச்சியை முன்னிலைப்படுத்தும் அரசியல் சூழலை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வசதிபடைத்தவா்களுக்கு குறைவாக வரி விதித்து, நடுத்தர ஏழை மக்களுக்கு அதிக வரி விதிக்கும் முறையை மாற்றுவதற்கான வரி சீா்திருத்தம் அவசியம். இந்திய பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய பொருளாதார சங்கம் அவ்வப்போது உரிய ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என்றாா்.

விழாவில், இந்திய பொருளாதார சங்கத்தின் தலைவா் ஏ.டி.என்.பாஜ்பாய், வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவா் ஐசரி கே.கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com