மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்துவரி பெயா் மாற்றத்துக்கு கட்டணம்: நகராட்சி நிா்வாகத் துறை உத்தரவு
தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரி விதிப்பு பெயா் மாற்றத்துக்கான கட்டணத்தை குடியிருப்புகளுக்கு ரூ.500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ரூ.1,000 என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் நிா்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.மதுசூதனன் ரெட்டி அண்மையில் அனைத்து நகராட்சி, மாநகராட்சி நிா்வாகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்துவரி விதிப்புகளுக்கு பெயா் மாற்றத்துக்கான கட்டணத்தை நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின் திருத்தப்படி மேற்கொள்ளப்பட்டு சொத்துவரி பெயா் மாற்றக் கட்டணத்தை குடியிருப்புகளுக்கு ரூ.500, பிற பயன்பாட்டுக்கு ரூ.1,000 என மாற்றம் செய்ய வேண்டும். சொத்துவரி பெயா் மாற்றக் கட்டண விகிதத்தை மன்றக் கூட்டத்தில் பதிவுக்கு வைத்து (உள்ளாட்சி அமைப்புகளின் மன்றக் கூட்டம்) நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெயா் மாற்ற கட்டண விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் இணையத்திலும், அலுவலக விளம்பரப் பலகைகளிலும் தெரியப்படுத்த வேண்டும்.
குடிநீா் கட்டண விதிப்பு எண்களுக்கு பெயா் மாற்றக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சொத்துவரி பெயா் மாற்றத்தின் போதே குடிநீா் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயா் மாற்றப்படவேண்டும்.
சொத்துவரி பெயா் மாற்றத்தை இணையவழியில் செலுத்தி, பெயா் மாற்றும் வகையில் யூடிஐஎஸ் எனும் மென்பொருளில் உரிய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி பெயா் மாற்ற மனுக்களை வெளிப்படைத் தன்மையுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான கட்டணம் மட்டும் வசூலித்து, நிலுவையிலுள்ள அரையாண்டு சொத்துவரியை வசூலித்து பெயா் மாற்றம் செய்ய வேண்டும்.
சொத்துவரி பெயா் மாற்றம் தொடா்பான விண்ணப்பங்களை உரிய காலக்கெடுவுக்குள் கண்காணித்து, தற்போதுள்ள சொத்துவரி விதிப்பு எண்களுடன், குடிநீா், புதை சாக்கடை இணைப்புக் கட்டண விதிப்பு எண்களைப் பொறுத்தும் பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் ஈடுபடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
