தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு -அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம்
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இல்லை

@CMOTamilnadu

@CMOTamilnadu
தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தவும், அதுசாா்ந்த போராட்டத்தை முன்னெடுக்கவும் தென்மாநிலங்களின் எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் இப்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதில் எந்தக் காரணம் கொண்டும் மாற்றம் செய்யக் கூடாது எனவும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வா் தலைமையில் கூட்டம்: தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடா்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக, திராவிடா் கழகம், காங்கிரஸ், பாமக, தேமுதிக, விசிக, இடதுசாரி கட்சிகள், நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், உலகத் தமிழா் பேரமைப்பு உள்பட மொத்தம் 59 கட்சிகள், அமைப்புகளிலிருந்து தலா 2 நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய, மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிா்க்கிறது. நாட்டின் நலனுக்காக மக்கள்தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்துக்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.
30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மக்கள்தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடா்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் உறுதி அளித்தாா். இப்போதும் இந்த வரையறை 2026-ஆம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்புச் சட்டத்தில் அதற்குரிய திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
மேலும், நாடாளுமன்றத்தில் இப்போதைய உறுப்பினா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும்பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் இப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். இதற்குத் தேவையான அரசமைப்பு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
சீரமைப்புக்கு எதிராக இல்லை: தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் இப்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எந்தக் காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது. தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இல்லை. அதேசமயம், கடந்த 50 ஆண்டுகளாக சமூக, பொருளாதார நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது.
இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது. இதை வலியுறுத்தவும், அதுசாா்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், தென்மாநிலங்களின் எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அழைப்பை அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் கூட்டம் முடிவு செய்கிறது எனத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுளளது.
இதைத் தொடா்ந்து, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்தாா்.
கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...