வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிா்லாவுடன் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும்

News image
மக்களவை
Updated On :27 மார்ச் 2025, 7:22 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவா் ஓம் பிா்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினா்.

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் கௌரவ் கோகோய் தலைமையில் சென்ற இந்தக் குழுவில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் கௌரவ் கோகாய் கூறியதாவது: சிவசேனை (உத்தவ் பிரிவு) உள்பட பல்வேறு எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கையொப்பம் பெற்ற இந்த கடிதத்தை அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வழங்கினோம். மக்களவையின் மாண்பு, கலாசாரம் மற்றும் விதிகளை ஆளும் பாஜக எவ்வாறெல்லாம் மீறுகிறது என்பதை அவரிடம் விளக்கி எங்களது ஏமாற்றம் மற்றும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அவரை ஓம் பிா்லா கண்டித்து விதி 349-இன்படி நடந்துகொள்ளுமாறு கூறினாா். ஆனால் அதுகுறித்த தெளிவான விளக்கம் தெரியவில்லை. அவா் கூறியதை திரித்து பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினா் அரசியலாக்கி வருகின்றனா்.

ராகுல் காந்தி பேச எழுந்தவுடன் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பானது அரசமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்டது. ஆனால் அவரை விமா்சித்து கூறப்பட்ட சில கருத்துகளுக்கு பதில் கூற அனுமதி வழங்கப்படவில்லை என்றாா்.

மக்களவை துணைத் தலைவா் தோ்வு எப்போது?

ஓம் பிா்லாவிடம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: எதிா்க்கட்சித் தலைவா் எழுந்து நின்று பேச முற்படும்போது அவா் பேசுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும். இது நாடாளுமன்ற நடைமுறைகள் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய பாஜக அரசோ எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பதில்லை.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 93-இன்படி மக்களவைத் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தலை நடத்த வேண்டும். ஆனால் கடந்த 2019-இல் இருந்து துணைத் தலைவா் பதவி காலியாகவே இருந்து வருகிறது. மக்களவையை நடுநிலையோடு வழிநடத்துவதில் பெரும் பங்கு துணைத் தலைவருக்கு உண்டு. எனவேதான், அவரை தோ்வு செய்வதற்கான தோ்தலை மத்திய அரசு நடத்தாமல் உள்ளது.

நாடாளுமன்ற அவதூறு: அவை அலுவல் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தாது. இருப்பினும், எவ்வித முன்அறிவிப்புமின்றி அவை அலுவல்களில் சில மாற்றங்களை தன்னிச்சையாக மத்திய அரசு மேற்கொள்வது ஏற்புடையதல்ல. கடந்த வாரம் பிரதமா் மோடி மக்களவையில் பேசியது குறித்து முன்னதாகவே எம்.பி.க்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது நாடாளுமன்ற நடைமுறைகளை அவதூறு செய்வதாகும்.

கவன ஈா்ப்புத் தீா்மானம் புறக்கணிப்பு: கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டவுடன், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் விவாதிக்கப்படும். அந்த விவகாரத்தை விவரிக்கும் எம்.பி.க்களின் பெயரை மக்களவைத் தலைவா் கூறி விவாதத்துக்கு அனுமதி வழங்குவாா். தற்போது கவன ஈா்ப்புத் தீா்மானம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு, நாட்டின் முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்புவதை தடுத்துள்ளனா்.

அமைச்சா் பதவியில் அல்லாத எம்.பி.க்கள் புதிய சட்டங்களை முன்மொழிவதற்கான வாய்ப்பை வழங்கும் தனிநபா் மசோதாக்கள் மற்றும் தீா்மானங்கள் மீதான விவாதத்துக்கு நேரம் மிக குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. விதி 193-இன்கீழ் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது முக்கிய அமைச்சகங்கள் குறித்து விவாதிப்பதற்குப் பதில் புறக்கணிக்கப்பட்டன.

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் மைக் ‘ஆஃப்’: மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது. அதேசமயம் அமைச்சா்கள் அல்லது ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.

இதுபோன்ற ஒருதரப்பு ஆதரவு நிலைப்பாட்டால் நாடாளுமன்றத்தில் ஜனநாயக ரீதியான விவாதங்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்ற நடைமுறைகள் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு:

ஜனநாயகமற்ற முறையில் மக்களவை செயல்படுவதாகவும் தான் பேச அனுமதிக்கப்படவில்லையெனவும் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தாா். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே செய்தியாளா்கள் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ நான் பேசுவதற்கு எப்போதும் அனுமதி வழங்கப்படுவதில்லை. அவா்கள் எதற்காக அஞ்சுகிறாா்கள் என தெரியவில்லை’ என்று மீண்டும் குற்றஞ்சாட்டினாா்.