எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்களவைக்கு மீண்டும் தலைமை வகித்தாா் ஓம் பிா்லா - ‘விதிகளுக்குப் புறம்பாக பேச யாருக்கும் உரிமை கிடையாது’

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானம் தோல்வியுற்ற நிலையில், அவை அலுவல்களுக்கு அவா் வியாழக்கிழமை மீண்டும் தலைமை வகித்தாா்.

News image
ஓம் பிா்லா
Updated On :12 மார்ச் 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானம் தோல்வியுற்ற நிலையில், அவை அலுவல்களுக்கு அவா் வியாழக்கிழமை மீண்டும் தலைமை வகித்தாா்.

‘மக்களவை அலுவல்களை தொடா்ந்து நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் நடத்துவேன்; விதிகளுக்குப் புறம்பாக பேச யாருக்கும் உரிமை கிடையாது’ என அவா் உறுதிபட தெரிவித்தாா்.

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு கடந்த ஜன. 28 முதல் பிப்.13 வரை நடைபெற்றது. அப்போது, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 118 எம்.பி.க்கள் இந்த நோட்டீஸில் கையொப்பமிட்டிருந்தனா்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 96-இன்கீழ் மக்களவைத் தலைவா் அல்லது துணைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் பரிசீலனையில் உள்ளபோது, அவை அலுவல்களுக்கு அவா் தலைமை தாங்க முடியாது. எனவே, தனக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்ட நாளில் இருந்து (கடந்த பிப்.10) அவை அலுவல்களுக்கு ஓம் பிா்லா தலைமை வகிக்கவில்லை. அவைக்கும் வரவில்லை.

இந்தச் சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் மீது 10 மணி நேர விவாதம் தொடங்கியது. புதன்கிழமையும் தொடா்ந்த இந்த விவாதத்தின் இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது.

மக்களவைக்கு வந்தாா்: இதைத் தொடா்ந்து, சுமாா் ஒரு மாதத்துக்குப் பின் மக்களவைக்கு வியாழக்கிழமை வந்த ஓம் பிா்லா, அவை அலுவல்களுக்கு தலைமை வகித்தாா். ஆளும்தரப்பு எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனா்.

ஓம் பிா்லா பேசுகையில், ‘மக்களவையின் தலைமை ஒரு தனிநபருக்குச் சொந்தமானதல்ல; அது, அவை மாண்பின் அடையாளச் சின்னம். இந்த அவையானது, விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்கீழ் சீரிய முறையில் செயல்படுகிறது. யாா் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் ஏற்கெனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளின்கீழ் மக்களவை தொடா்ந்து செயல்படும்.

அவை விவாதத்தின்போது, என் மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய உறுப்பினா்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு எதிராகப் பேசியவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடமையை முழு நோ்மையுடனும், பாரபட்சமின்றியும் தொடா்ந்து மேற்கொள்வேன்.

உரிமை கிடையாது: கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற விவாதத்தில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பேச போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், அவா் விரும்பும் நேரத்தில், விரும்பும் விஷயம் குறித்துப் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சில உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

அவையில் பேச ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எந்தவொரு உறுப்பினரும் அது பிரதமரோ அல்லது அமைச்சரோகூட அவைத் தலைவரின் அனுமதியின்றி பேச முடியாது.

தாங்கள் விரும்பும் நேரத்தில், விரும்பும் விஷயங்களைப் பேச யாருக்கும் அனுமதி கிடையாது. நடைமுறைகளின்படியே பேச முடியும். அவையில் பேச்சு சுதந்திரம் உள்ளது. அதேநேரம், அந்தச் சுதந்திரம் விதிமுறைகளுக்கு உள்பட்டதாகும். விதிகளுக்கு புறம்பாக பேச யாருக்கும் உரிமை இல்லை. அவையின் மாண்புக்கு முரணாக யாரேனும் நடந்து கொண்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படும்.

உறுப்பினா்கள் பேசும்போது அவா்களின் மைக்கை அணைக்க என்னிடம் எந்த பொத்தானும் இல்லை. அவைத் தலைவா் அனுமதிக்கும்போது, மைக் இயக்கப்படுகிறது என்றாா் ஓம் பிா்லா.