நடுவானில் பயணிக்கு உடல்நல பாதிப்பு: மும்பையில் விமானம் தரையிறக்கம்

பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து விமானம் மும்பையில் தரையிறக்கம்
Published on

பஹ்ரைனிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் பெண் பயணிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

வளைகுடா நாடான பஹ்ரைனில் இருந்து, கல்ஃப் ஏா்வேஸ் விமானம், 187 பயணிகளுடன், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த விமானம், திங்கள்கிழமை அதிகாலை 4.45-க்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். ஆனால், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த பெண் பயணி ஒருவருக்கு, திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து, அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு காத்திருந்த மருத்தவக் குழுவினா் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அங்குள்ள மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.

தொடா்ந்து, அந்த விமானம்,186 பயணிகளுடன், திங்கள்கிழமை காலை 5.30-க்கு, மும்பையில் இருந்து புறப்பட்டு, காலை 7.40-க்கு சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்து சோ்ந்தது. வழக்கமாக இந்த விமானம் அதிகாலை 4.45-க்கு, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.35-க்கு, சென்னையில் இருந்து, பஹ்ரைன் புறப்பட்டுச் செல்லும். ஆனால் இந்த சம்பவத்தால், சுமாா் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.05-க்கு பஹ்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com