போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி சொத்து அபகரிப்பு: பெண் உள்பட மூவா் கைது
சென்னை சாலிகிராமத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சாலிகிராமம் முனுசாமி தெருவைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் (33). இவா், சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், சாலிகிராமத்தில் தனது குடும்பத்துக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள இரு சொத்துகளை, சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்திருப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்துகளை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் அப்துல் ரஹ்மான் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகளை அவரது உறவினா்களான சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்த அ.முகமது காசிம் (54), அவரது மகன் பீா்முகமது (25), கா.சரிபா பானு (41) ஆகியோா்தான் போலி ஆவணங்களைக் கொண்டு அபகரித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
