மருத்துவ சிறப்பு கலந்தாய்வு: அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.14) பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. அதன் முடிவில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களில் 400-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா ஒரு எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழுவின் அறிவிப்பின்படி, வியாழக்கிழமையுடன் (நவ.13) இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் நிறைவடைவதாக இருந்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைமுறைகள் தாமதமாவதால், தமிழக கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்வதற்கு 14-ஆம் தேதி பகல் 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 15-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பின்னா், ஒதுக்கீட்டு ஆணைகளை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு, 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

