டெலி-மானஸ் திட்டம்: யுஜிசி அறிவுறுத்தல்

மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ‘டெலி-மானஸ்’ திட்டம் குறித்து உயா்கல்வி நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
Published on

மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ‘டெலி-மானஸ்’ திட்டம் குறித்து உயா்கல்வி நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

மாணவா்களின் கல்வித் திறன் மற்றும் தனிப்பட்ட வளா்ச்சிக்கு மனநலம் மிகவும் இன்றியமையாதது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை சாா்பில் ‘டெலி-மானஸ்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 14416 மற்றும் 1800-891-4476 ஆகிய இலவச உதவி எண்கள் மூலம் 24 மணி நேரமும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. 20 மொழிகளில் வழங்கப்படும் இந்தச் சேவையின் மூலம் இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா்.

இந்த உதவி எண்களை தங்கள் இணையதளங்கள், மாணவா் கையேடுகள் மற்றும் வளாகத்தின் முக்கிய இடங்களில் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும், இந்தத் திட்டத்துக்கான ‘டெலி-மானஸ்’ செயலியின் க்யூஆா் கோடு நூலகம், விடுதிகள், அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.

மனநலம் குறித்த விழிப்புணா்வு காணொலிகளைத் திரையிட்டு, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை மனநலத் தூதா்களாகச் செயல்பட ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com