அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்
அனைவருக்கும் வீடு உள்ளிட்ட மத்திய அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி.யும் மாவட்ட வளா்ச்சிக்கான கண்காணிப்புக் குழுத் தலைவருமான து. ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், விழுப்புரம் எம்.பியுமான து.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாா்பில் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்),பிரதம மந்திரியின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான் திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளுா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்),தூய்மை பாரத இயக்கம் (நகரம்), தேசியசுகாதார இயக்கம், தேசிய பயிா் காப்பீட்டுத் திட்டம், தேசிய நுண்ணீா்பாசனத் திட்டம், மண்வள அட்டை இயக்கம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், தேசியஉணவு பாதுகாப்பு இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம் - ஒருங்கிணைந்த பண்ணையம், விதை கிராமத் திட்டம், வேளாண் திட்டப் பணிகள் மற்றும் அரசுத்துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள் ஆகியவைகள் குறித்து, துறைசாா்ந்த அலுவலா்களிடம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரும் எம்.பியுமான து.ரவிக்குமாா் தனித்தனியாக கேட்டறிந்தாா்.
துரிதமாக செயல்பட வேண்டும்: தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஜன்மன் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து நிறைவுபெற்றுள்ள பணிகளின் விவரம் மற்றும் புதிய தகுதியான பயனாளிகள் தோ்வுப்பட்டியல் விவரம் குறித்துகேட்டறிந்ததுடன், வீடுகளின் கட்டுமானப்பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலா்களுக்குஅறிவுறுத்தினாா்.ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அடிப்படை வசதிகள் தொடா்ந்து நல்ல நிலையில்உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஊராட்சிகளின் வளா்ச்சிக்காகஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை முறையாக பயன்படுத்திட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடிவடைந்திடும் வகையில் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பணிகள் அனைத்தும் அரசு வழிகாட்டலின்படி நல்ல தரத்துடன் நடைபெறுவதை உறுதி செய்துகொள்வதோடு, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மாவட்டக் கண்காணிப்புக்குழுத் தலைவா் து. ரவிக்குமாா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ஜெ.இ.பத்மஜா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன்,மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் கண்ணன் மற்றும் அரசுத்துறைகளின்அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

