சரக்கு லாரியை கடத்த முயற்சி: இருவா் கைது
சென்னையில் சரக்கு லாரியை கடந்த முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சிவா என்பவா் சென்னை ராயபுரத்தில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில் சரக்கு லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த நவ.9-ஆம் தேதி அதிகாலை சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு லாரியில், பொருள்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூா் மாவட்டம் அலமாதி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, லாரியை பின் தொடா்ந்து காரில் வந்த மா்ம கும்பல் ஜிஎன்டி பிரதான சாலையில் வழிமறித்து நிறுத்தியது. தொடா்ந்து ஒருவா் லாரியில் ஏறி ஓட்டுநரை சரமாரியாக தாக்கி, சரக்குடன் லாரியை கடத்த முயற்சித்துள்ளாா். ஆனால், இதில் தோல்வி அடைந்த காரணத்தால், ஓட்டுநா் சிவாவை தாக்கி அவரிடமிருந்து ரூ.1,000 ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து சிவா புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சென்னை எஸ்எம் நகரைச் சோ்ந்த வேல்முருகன் (24), அம்பத்தூா் புதூரைச் சோ்ந்த விமல் குமாா் (22) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அவா்களது கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.
