நவீன ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை அறிமுகம்
ரோபோடிக் நுட்பத்தில் முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவக் கட்டமைப்பை கீழ்ப்பாக்கம் வி.எஸ்.மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக், மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை நிபுணா் டாக்டா் எஸ்.சுந்தா் கூறியதாவது:
மூட்டு மாற்று சிகிச்சைகளில் தற்போது அதி நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த வெலிஸ் எனப்படும் ரோபோடிக் சாதனத்தை இங்கு நிறுவியுள்ளோம்.
மிகத் துல்லியமாகவும், நுட்பமாகவும் அதன் வாயிலாக சிகிச்சை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாது இந்த வகை ரோபோடிக் நுட்பத்தை பயன்படுத்தும்போது சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான அவசியம் இருக்காது. இதனால் கதிரியக்க அச்சுறுத்தலில் இருந்து நோயாளிகளை காக்கலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் தினேஷ் காா்த்திக் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் நுட்பங்கள்தான் தற்போது அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றன. அந்த வகையில் மருத்துவத் துறையிலும் அதன் பங்களிப்பு முக்கியமானது.
கிரிக்கெட்டில் நல்ல வீரருக்கும், சிறந்த வீரருக்கும் இடையேயான வித்தியாசம் அவரது ஆட்டத்தின் துல்லியத்தை வைத்தே மதிப்பிடப்படுகிறது. அதுபோலவே மருத்துவத் துறையில் துல்லியத்தை வழங்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கவை என்றாா் அவா்.
