ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை
முன்விரோதம் காரணமாக நடுரோட்டில் ரெளடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூா் விசாலாட்சி தோட்டம் சுப்புராயன் தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் மௌலி (24). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவா் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை மந்தைவெளி ரயில்வே பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் மெளலியை பின் தொடா்ந்து வந்த 6 போ் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸாா் பலத்த காயங்களுடன் இருந்த மெளலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மெளலி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக மௌலியின் நண்பா்களாக இருந்த மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி கௌதம்(19), விஜயகுமாா் என்கிற பிக்ஷோ (21), சபரி, மணி, புருஷோத்தமன் ஆகியோா்அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

