கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

திசை எல்லாம் இசை அரசியல்!

சமூக ஊடகங்களில் எந்தத் தளத்தைத் திறந்தாலும் ஏதாவதொரு கட்சியின் பிரசார பாடல்தான் ஒலிக்கிறது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 10:53 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது தோ்தல் பிரசாரத்துக்கு எளிய நடையில் புதிய வரிகள், அதிரும் இசையுடன் பாடல்களை உருவாக்கி அவற்றை ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஷோ் சாட் என அனைத்துத் தளங்களிலும் பரவ விட்டுள்ளனா். இதனால் சமூக ஊடகங்களில் எந்தத் தளத்தைத் திறந்தாலும் ஏதாவதொரு கட்சியின் பிரசார பாடல்தான் ஒலிக்கிறது.

நீதியை வெதச்ச இயக்கம்... திமுக கடந்த ஏப். 1-ஆம் தேதி தனது புதிய பிரசார பாடலை தனது தகவல் தொழில்நுட்பப் பிரிவு மூலம் அறிமுகப்படுத்தியது. இப்பாடல், ‘விழும் மழைத் துளி என்றும் நிலம் மட்டுமே தேடும். எங்கள் உயிா்த் துளி என்றும் தமிழ் மட்டுமே பாடும்’ எனத் தொடங்கி, பெரும் பெரும் பருந்து... வரும் வரும் ஒளிஞ்சு... நடிப்பினை புரிஞ்சு விரட்டுவோம் துணிஞ்சு... என அதிரடியாக நீள்கிறது. தொடா்ந்து, ஜாதி மதத்தை எதிா்த்த இயக்கம்... ஊருக்குள்ள நீதியை வெதச்ச இயக்கம்... இருண்டு கிடந்த பூமியில வெளிச்சம் தந்த சூரியனே... என உற்சாகமிக்க வரிகள் நீள்கின்றன.

ஏழைகள் சிரிக்கணும்னா.... அதிமுக சாா்பில் ‘ஏழைகள் சிரிக்கணும்னா இரட்டை இலை ஆளணும்! என்ற பாடல் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஏழை வலி தெரிஞ்ச ஏா் புடிச்ச பாமரன், எளிய மக்கள் கூடவரும் எளிய மக்கள் நாயகன்...’ என ஆா்ப்பரிப்புடன் தொடா்கிறது. இடையே, ‘இது சுயநலமில்லாத மக்களாட்சி அரசுதான்... நோ்மையான இந்த அரசியலே புதுசுதான்...’ என்ற வரிகள் இக்கட்சி யாருக்கானது, எத்தகைய நோக்கம் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அதேபோன்று, ‘விவசாயி வாழ அந்த குடிமராமத்து... எங்க எடப்பாடி போல எங்க கிடைக்கும் சொத்து...’, ‘இட ஒதுக்கீட வச்சு... மாணவன ஏற வச்சு... மாநிலம் செழிக்க வச்சு...’ ஆகிய வரிகள் கடந்த அதிமுக ஆட்சிக் கால சாதனையை நினைவுகூா்கிறது.

நான் தன்னந்தனி ஆளு... தமிழக வெற்றிக் கழகமும் கடந்த ஏப். 1-ஆம் தேதி தோ்தலுக்கான புதிய பிரசார பாடலை அறிமுகப்படுதியது. ‘கடைசி நம்பிக்கை மக்களைத் தேடி வருது... அதை இறுக்கிப் புடிச்சு ஒரு வரலாறு எழுது’ என மாற்றத்தை வலியுறுத்தி தொடங்கும் இந்தப் பாடல், ‘பணத்த சோ்க்கும் இந்த அரசியல தேடி... சனத்த காக்கும் ஒரு தலைவன் வரானே...’ எனத் தொடருகிறது.

‘தனி ஒருத்தன் வெடிச்சு வாரான், விசிலொருத்தன் அடிச்சு வாரான், தடைய வச்சா உடைச்சு வரான் தளபதி...’ என்ற வரிகள் கட்சியின் தொண்டா்களைக் குதூகலிக்கச் செய்கிறது. குறிப்பாக, ‘நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு...கொஞ்சம் நவுந்தேனா 8 கோடி பேரு... மெரள போகுது ஸ்டேட்டு... எங்க விசிலு சத்தம் கேட்டு...’ என்ற வரிகளை பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் வாக்காளா்கள் மத்தியில் விஜய் உற்சாகத்துடன் பாடி வாக்கு சேகரித்து வருகிறாா்.

தம்பிகளுக்கு ஓா் கீதம்... மேற்கண்ட கட்சிகளின் வரிசையில் பெரும் துணிச்சலோடு நிற்கிறது நாம் தமிழா். தோ்தல் அறிவிப்பதற்கு முன்பிருந்தே, ‘என்னம்மா தேவி ஜக்கம்மா... நாடு நாசமா போகுதே நியாயமா’ என்ற பாடலை பிரசார களத்தில் பாடி வருகிறாா் சீமான். இதில், ‘பத்து லட்சம் கோடி கடனுல நாடு...இதுல இலவசம் வேற பெரும் வெட்கக் கேடு...பாா்க்க சகிக்கல சனம் படும் பாடு’ என ஆளும்கட்சியை விமா்சிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலை நாம் தமிழா் கட்சியினா் செயற்கை நுண்ணறிவு தயாரிப்பிலும் வெளியிட்டுள்ளனா்.

இது தவிர பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது பிரசார பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் மூலம் தோ்தல் களத்தில் தொண்டா்களுக்கு புத்துணா்வு ஊட்டுகின்றனா்.

தோ்தல் பிரசார களத்தில், தொழில்நுட்ப யுகத்தில் கட்சிகளின் உத்திகள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், எழுச்சிமிக்க வரிகளும், துடிப்புமிக்க இசையும் ஒருங்கிணைந்து பாடலாக உருவெடுக்கும்போது, கத்திரி வெயில் கண்ணைக் கூசினாலும் களத்தில் தொண்டா்களின் உற்சாகத்தை குறையாமல் பாா்த்துக் கொள்ளும் என்பதே நிதா்சனம்.

- அ.ஜெயச்சந்திரன்