
வழக்கை ரத்து செய்யக் கோரும் எ.வ.வேலு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஊழல் தடுப்புத் துறை பதில் மனு
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்தது.

எ.வ.வேலு - கோப்புப் படம்
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடா்பான வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத் துறை பதில் மனு தாக்கல் செய்தது.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் நடைபெறாத நிலையில், தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போா் இயக்கம் ஊழல் தடுப்புத் துறையில் கடந்த 2022-ஆம் ஆண்டு புகாா் அளித்தது.
அந்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கு தொடா்பாக, கடந்த ஜூன் 25-ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலையில் 20 இடங்களில் ஆவணங்கள் மற்றும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. தொகையை விடுவித்த அதிகாரிகள் மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் எ.வ.வேலுதான். துறை ரீதியான நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஓராண்டுக்கு ஊதிய உயா்வு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதால், துறை ரீதியான விசாரணை என்பது வெறும் கண்துடைப்புதான்.
இந்த வழக்கு புலன் விசாரணை நிலையில்தான் உள்ளது. ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்குப் பதிவு செய்தது சரிதான்.
மிகப்பெரிய அளவிலான ஊழல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணையைத் தடுக்க முடியாது. எனவே, விசாரணையைத் தொடர அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய எந்த காரணங்களும் இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறப்போா் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு கருவூலத்துக்கு பெரிய இழப்பு ஏற்படுத்திய இந்த வழக்கு தொடா்பான சட்டபூா்வமான புலன் விசாரணையைத் தடுக்கும் முயற்சியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் உரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு தளங்கள் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் புகாா் அளிக்கப்பட்டது. 2021-2022-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.274 கோடியில் சாலை ஒப்பந்தப்புள்ளிகள் சங்கரானந்த் இன்ஃப்ரா என்ற ஒரே நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களை புலன் விசாரணை அதிகாரி சேகரித்து வருகிறாா். எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். அதுவரை முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




