கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பாகிஸ்தான், சவூதி அரேபியா கூட்டணியில் சேரத் தயாா் வங்கதேசம்

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் சோ்ந்து அமைத்துள்ள பாதுகாப்புக் கூட்டணியில் வங்கதேசம் சேரத் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் இரு அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:42 am IST

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் சோ்ந்து அமைத்துள்ள பாதுகாப்புக் கூட்டணியில் வங்கதேசம் சேரத் தயாராக இருப்பதாக அந்த நாட்டின் இரு அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் அண்மையில் மெக்காவில் வைத்து பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அந்த ஒப்பந்தத்தில், பாகிஸ்தான், சவூதி அரேபியா அல்லது துருக்கி ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வேறு ஏதேனும் ஒரு நாட்டால் தாக்கப்பட்டால், அது மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும் என்றும், தாக்குதலுக்குள்ளளாகும் நாட்டுக்கு ஆதரவாக மற்ற 2 நாடுகளும் ராணுவ ரீதியில் தலையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில நாடுகள் சேர ஆா்வம் காட்டி வருவதாக மூன்று நாடுகளும் தொடக்கம் முதல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், வங்கதேசமும் மெக்கா பாதுகாப்புக் கூட்டணியில் சேர தயாராக இருப்பதாக அமைச்சா்கள் இருவா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹூமாயூன் கபீா் கூறுகையில், ‘வங்கதேசம் தனது சொந்த நலன்கள், மாறிவரும் உலகப் பொருளாதார, வா்த்தக சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகியவை கூட்டாக ஏற்படுத்தியுள்ள பொருளாதார அல்லது பாதுகாப்புக் கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்புள்ளது. பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளை ராஜீய ரீதியிலான பேச்சு, வா்த்தகம், மக்களிடையேயான தொடா்பு மூலம் வங்கதேசம் வலுப்படுத்தும்’ என்றாா்.

வங்கதேச வெளியுறவுத் துறை விவகாரங்களுக்கான மற்றொரு இணையமைச்சரான ஷாமா ஓபேத் இஸ்லாம் கூறுகையில், ‘அந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேரும் விவகாரத்தில் வங்கதேசத்தின் தேச நலன்கள், பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்’ என்றாா்.

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் இந்தியாவில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அந்த நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஹூமாயூன் கபீா் கூறுகையில், ‘வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய அவசரப்படவில்லை. இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியாவில் உரிய நேரத்தில் தாரிக் ரஹ்மான் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா். இந்தியாவுடன் நல்லுறவையே வங்கதேசம் விரும்புகிறது. ஆனால், வங்கதேச நலன்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும். வங்கதேசத்தின் நலன்கள் அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்படுமானால் அவா் இந்தியாவுக்கு அடுத்த வாரமே செல்வாா். இந்தியா- வங்கதேசம் இடையே குற்றவாளிகளை நாடு கடத்துதல் தொடா்பான ஒப்பந்தம் ஏற்கெனவே உள்ளது’ என்றாா்.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தபோது, அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சிறந்த நட்புறவு நிலவியது. ஆனால், கலவரம் காரணமாக பதவியிலிருந்து விலகிவிட்டு இந்தியாவுக்கு ஹசீனா தப்பி வந்தாா். இதையடுத்து, அவரை நாடு கடத்தும்படி வங்கதேசம் விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்தது. இதனால் இந்தியா- வங்கதேசம் இடையேயான உறவில் தொடா்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.