தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

அச்சத்தின் வெளிப்பாடு!

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

News image

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் - X | PMO Pak

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்காசியாவில் இன்னும் தொடரும் பதற்றத்துக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் யாருக்கு எதிரானது, யாரைப் பாதுகாக்கப் போகிறது என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள அல் ஸஃபா அரண்மனையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் ஆகியோர் இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலும் மற்ற நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.

'எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிரான கூட்டுத் தடுப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் இது வழிவகுக்கும்' எனவும் மூன்று நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025, செப்டம்பர் 17-ஆம் தேதி இதேபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கையொப்பமானது. 2025, செப்டம்பர் 9-ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் பாதுகாப்புக்கு அமெரிக்காவையே நீண்டகாலம் நம்பியிருக்க முடியாது என்கிற மனநிலையை வளைகுடா நாடுகளுக்கு ஏற்படுத்தியது. அதன் விளைவுதான் சவூதி - பாகிஸ்தான் இடையிலான ஒப்பந்தம்.

இப்போது மேற்காசிய போர்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பின்னணியிலும் அதேபோன்ற பாதுகாப்பு அச்சம் ஒரு காரணமாக இருக்கக் கூடும். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா - ஈரான் போரில், அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டது ஈரான். அதிலும் சவூதி அரேபியா மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மையப்புள்ளி ஈரான்தான் என்பது தெளிவாகிறது.

அமெரிக்கா தலைமையில் 32 நாடுகளைக் கொண்ட 'நேட்டோ' அமைப்பு பாணியிலானது இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் நேட்டோ அமைப்பைப் போன்று பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ராணுவத் தலைமையோ, நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்ட கூட்டுப் படையோ, ஒருங்கிணைந்த தலைமையகமோ அல்லது அதற்கான கட்டமைப்புகளோ முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இப்போது உருவாக்கப்படவில்லை.

சவூதி அரேபியா, பாகிஸ்தான் இடையிலான முந்தைய பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது பாகிஸ்தான் மீதும் நடத்தப்பட்டதாகத்தான் அர்த்தம். சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீதும், யேமனில் இருந்து செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதா என்றால் இல்லை.

ஈரானைப் பகைத்துக்கொள்ள பாகிஸ்தான் முன்வராது.2000-இல் கையொப்பமான வளைகுடா அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்பு கவுன்சிலின் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் இப்போதைய மூன்று நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தைப் போன்றதுதான். 26 ஆண்டுகளாக அந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்தும், எந்தவொரு நாடும் மூன்றாவது நாட்டுக்கு எதிராக எந்த ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

சவூதி அரேபியா இந்த முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முனைப்புக் காட்டியது ஏன்? ட்ரோன்கள் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழில்நுட்பத்தில் வலுவாக உள்ள துருக்கி, அணுஆயுத பலம் மற்றும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வலுவான பாகிஸ்தான் ஆகியவற்றுடன் மேற்கொண்டுள்ள கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்தியத்தில் தனது பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் என நம்புகிறது பொருளாதார ரீதியாக பலமாக உள்ள சவூதி அரேபியா.

இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தான் முனையுமா என்கிற கேள்வியும் எழுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது துருக்கியின் உதவியை பாகிஸ்தான் பெற்றது. அதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, உணர்வு ரீதியாகவும் வலுவாக உள்ளது.

அமெரிக்காவின் மீதான நம்பிக்கை அதன் நட்பு நாடுகளிடம் குறைந்து வருகிறது என்பதுதான் இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்தும் உண்மை. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவும் சட்டை செய்யப்போவதில்லை; ஈரானும் பயப்படப் போவதில்லை; அமெரிக்காவும் அதிபர் டிரம்ப்பும் கவலைப்படப் போவதில்லை.

நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்

பண்பறிந்து ஆற்றாக் கடை.

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

திருக்குறள் (எண் 469) அதிகாரம்: தெரிந்து செயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.