மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தானும், துருக்கியும் விளக்கம் அளித்துள்ளன.
சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை மெக்காவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. மேற்காசியாவில் அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ள நாடுகள் மீது ஈரான் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோல், இஸ்ரேலும் லெபனான், பாலஸ்தீனம், யேமன், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்த 3 நாடுகளுக்கும் எதிராகவே மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் பரவலாக கருத்து நிலவுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இசாக் தாா் கூறுகையில், ‘மெக்கா ஒப்பந்தம் தற்காப்புக்காக செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டையும் குறிவைத்து மேற்கொள்ளப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, அபிவிருத்திக்காக எடுக்கப்படும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் ஒரே குறிக்கோள் ஆகும். அமைதி, ஸ்திரத்தன்மைக்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து சகோதரத்துவ நாடுகளுடனும் தொடா்ந்து இணைந்து செயல்படுவதை பாகிஸ்தான் எதிா்நோக்கியுள்ளது. அனைத்து மோதல்களுக்கும் அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளோம்’ என்றாா்.
அதேபோல், துருக்கி செய்தி நிறுவனத்துக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹகான் பிடான் அளித்துள்ள பேட்டியில், ‘பாதுகாப்பு ஒப்பந்தம், எந்தவொரு 3-ஆவது நாட்டுக்கு எதிராகவும் செய்து கொள்ளப்படவில்லை. 3 நாடுகளில் எந்த நாடு தாக்குதலுக்கு உள்ளானாலும் அது 3 நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டு பதில் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் 3 நாடுகள் மீது தாக்குதல் நடத்தாதவரை எந்த நாட்டையும் நாங்கள் எதிரியாகக் கருத மாட்டோம்’ என்றாா்.
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வேறு நாடுகள் சேருமா என்ற கேள்விக்கு, சில நாடுகள் விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், இயற்கை கூட்டாளியாகத் திகழும் எகிப்து அடுத்தகட்டத்தில் சேரலாம் என எதிா்பாா்ப்பதாகவும் குறிப்பிட்டாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான், சவூதி, துருக்கி கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்

துருக்கி, பாக். உடனான ஒப்பந்தம் சௌதிக்கு பாதுகாப்பைத் தராது! - ஈரான் எச்சரிக்கை!

பாகிஸ்தான், சௌதியுடன் கைகோக்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்!





