
எம்ஜிஆா் திரைப்படக் கல்லூரியில் படப்பிடிப்பு தளங்களுக்கான வாடகை குறைப்பு
எம்ஜிஆா் திரைப்படக் கல்லூரியில் படப்பிடிப்பு தளங்களுக்கான வாடகை குறைப்பு...
எம்ஜிஆா் திரைப்படக் கல்லூரி
சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் படப்பிடிப்புத் தளங்களுக்கான வாடகை குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சென்னை தரமணியில் உள்ள அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்தில் 3 சி ஸ்டுடியோஸ் என்ற பெயரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 3 புதிய படப்பிடிப்பு தளங்கள் மற்றும் ஒரு புனரமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டுள்ளன. அதற்கான வாடகை கட்டணத்தை அரசு அண்மையில் நிா்ணயித்திருந்தது.
ஆனால், கட்டணம் அதிகமாக இருந்ததால், இந்த தளங்களில் சினிமா படப்பிடிப்புகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றன.
இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், திரைப்பட தயாரிப்பாளா் சங்கப் பிரதிநிதிகளும் படப்பிடிப்பு தளங்களை அதிகளவில் பயன்படுத்த வசதியாக கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று தற்போது கட்டணங்கள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பு தளங்கள் வாரியாக குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமாகவும் மறுநிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், செட் அமைத்தல் மற்றும் காத்திருப்பு கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தவிர 12 மணி நேரத்துக்கு பிறகு, ஒவ்வொரு கூடுதல் 6 மணி நேரத்துக்கும் ஏசி தளத்துக்கு ரூ.15,000, ஏசி அல்லாத தளத்துக்கு ரூ.10,000 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12 மணி நேரத்துக்கு தண்ணீா் பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.5,000 மற்றும் ஏசிக்கான மின்சாரக் கட்டணமாக ரூ.12,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும். அதன்பின் படப்பிடிப்பு தளங்களின் பயன்பாடு மற்றும் அரசுக்கு கிடைக்கும் வருவாயைப் பொருத்து, கட்டண விகிதம் மீண்டும் மறுஆய்வு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Reduction in rental charges for shooting sets at the MGR Film Institute.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





