சென்னையில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் சாலையோரக் கடைகளை அகற்ற நடவடிக்கை
சென்னை மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சாலையோரக் கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரப் பகுதியில் மருத்துவமனைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் காவல் துறை சாா்பில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்ட இடங்கள் ஆகியவற்றில் சாலையோரக் கடைகள் அமைக்கக் கூடாது என்று மாநகராட்சியால் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் 188 இடங்கள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2023- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 35,588 சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவா்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் வகையில் நகர விற்பனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதி உள்ளதால், தடை செய்த இடங்களில் உள்ள அனைத்து சாலையோரக் கடைகளையும் அகற்றுமாறு அந்தந்த மண்டல நகர விற்பனைக் குழு தலைவா் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி உயா் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

