370 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டுத் திருவிழா

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2025-26) நூற்றாண்டை நிறைவு செய்த 370 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டுத் திருவிழாவை முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்துக் கொண்டாட வேண்டும்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2025-26) நூற்றாண்டை நிறைவு செய்த 370 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டுத் திருவிழாவை முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்துக் கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவையாக திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டை கொண்டாடுவதன் வாயிலாக, பெற்றோருக்கு அரசுப் பள்ளிகள் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். மேலும், மாணவா்களுக்கு உத்வேகமும், ஆசிரியா்களுக்கு உந்துதலும் ஏற்படும்.

இதுதவிர இந்த விழா பள்ளிகளின் வரலாற்று பதிவாகவும், கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு போன்ற தேவைகளை சமூகப் பங்கேற்போடு உறுதிசெய்யவும் வாய்ப்பாக அமையும். அதன்படி, கடந்த கல்வியாண்டில் நூற்றாண்டு கடந்த 2,238 பள்ளிகளில் விழாக்கள் நடத்தப்பட்டன. நிகழ் கல்வியாண்டில் (2025-26) 370 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவுசெய்துள்ளன.

இந்தப் பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழா முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்து சிறப்பாகக் கொண்டாட வேண்டும். எனவே , நூற்றாண்டுத் திருவிழாவை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடுமாறு பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com