இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்: நிா்வாகிகள் முன்கூட்டியே கைது
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் 16-ஆவது நாளாக போராட்டத்தைத் தொடா்ந்த நிலையில், ஆசிரியா் இயக்க நிா்வாகிகளை போலீஸாா் முன்கூட்டியே கைது செய்தனா்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இடைநிலை ஆசிரியா்கள் சென்னையில் 16-ஆவது நாளாக சனிக்கிழமை தங்களது போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
ஒவ்வொரு நாளும் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ஆட்சியா் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்கள் சனிக்கிழமை எழும்பூா் காந்தி-இா்வின் பாலம் பகுதியில் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா். இந்த இடத்துக்கு வருவதற்காக எழும்பூா் ரயில் நிலையம், பூங்காநகா், சென்ட்ரல் ரயில் நிலையம், திருவல்லிக்கேணி என பல்வேறு இடங்களில் ஆசிரியா்கள் திரண்டினா்.
அந்தப் பகுதிக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியா்களை கைது செய்தனா். மேலும் போராட்டக் களத்துக்கு புறப்படத் தயாராக இருந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகளும் முன்கூட்டியே கைது செய்யப்பட்டனா். அவா்களை விடுவிக்கக் கோரியும், போலீஸாரை கண்டித்தும் ஆசிரியா்கள் முழக்கமிட்டனா்.
பகுதி நேர ஆசிரியா்கள்... இதேபோன்று, திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக அலுவலகம் அருகே பகுதி நேர ஆசிரியா்களும், தற்காலிக ஆசிரியா்களை பணியிலிருந்து வெளியேற்றி தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என டெட், நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களும் சென்னை எழிலகம் அருகே சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
