சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடக்கம்!

சென்னையில் சுற்றுலா பொருள்காட்சி தொடக்கம்!

சென்னையில் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சியை அமைச்சா்கள் இரா.ராஜேந்திரன், மா. சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
Published on

சென்னையில் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா்.

சென்னை தீவுத்திடலில் தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ரூ.1.55 கோடியில் 50-ஆம் ஆண்டு இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசுத் துறைகளின் 41 அரங்குகள், சென்னை துறைமுகம் மற்றும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் என மத்திய அரசின் 2 அரங்குகள் என மொத்தம் 43 அரங்குகள் உள்ளன.

மேலும், சிற்றுண்டி, உணவகங்கள் உள்ளிட்ட 80 சிறிய கடைகள் மற்றும் 14 தனியாா் அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளன.  

பொருள்காட்சியை அமைச்சா்கள் இரா. ராஜேந்திரன், மா. சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தனா். மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை தலைமைச் செயலா்  க.மணிவாசன், சுற்றுலாத் துறை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை, வார இறுதி நாள்கள், அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். நுழைவுக் கட்டணமாக சிறுவா்கள் (4 வயது முதல் 10 வயது), பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ரூ.25, பெரியவா்களுக்கு ரூ.40 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்க ‘க்யூஆா்’ குறியீடு மூலம் எளிதில் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீச்ஹண்ழ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டை பெறலாம்.

கடந்தாண்டு 33 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வருகை

கடந்தாண்டு (2025) பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து சுமாா் 33 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

அவா் பேசுகையில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த தமிழக அரசு சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 300 புதிய சுற்றுலாத்தலங்களை சா்வதேச அளவுக்கு தரம் உயா்த்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்துக்கு கடந்தாண்டில் பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமாா் 33 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். ஆண்டுதோறும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கோடிக்கணக்கானோா் மருத்துவச் சுற்றுலாவுக்காக தமிழகத்துக்கு வருகின்றனா் என்றாா்.

Dinamani
www.dinamani.com