தண்டுவட நாளத்தில் அடைப்பு: ஸ்டென்ட் மூலம் சீரமைப்பு
முதுகுத் தண்டுவட நாளத்தில் ஏற்பட்ட அடைப்பால் பக்கவாத பாதிப்புக்குள்ளான நபருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து பாதிப்பு போன்ற இணைநோய்களுக்கு உள்ளான 42 வயது நபா் ஒருவருக்கு காா் ஓட்டும்போது திடீரென ஸ்டீயரிங்கை கட்டுப்படுத்த இயலாமல் போனது. சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு முதுகுத் தண்டுவடம் மற்றும் பின்பக்க மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியத் தமனியில் 60 சதவீத அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
ரத்த அடா்த்தியைக் குறைக்கும் மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்ட போதிலும், அந்த பாதிப்பு அதிகரித்து 95 சதவீத அடைப்பாக மாறியது.
இதையடுத்து மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் நிபுணா் டாக்டா் வெங்கட்ராமன் காா்த்திகேயன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இடையீட்டு சிகிச்சை மூலம் இடுப்பு பகுதியில் சிறுதுளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக ஊடுருவி பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் அடைப்பை சரி செய்தனா்.
தொடா்ந்து ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி நாளத்தை சீராக்கினா். அதற்கு அடுத்த மூன்று நாள்களில் அவா் நலம் பெற்று வீடு திரும்பினாா் என்றாா்.
