பழ வியாபாரி கொலை வழக்கு: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை

பழ வியாபாரி கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 19-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

பழ வியாபாரி கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 19-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பெரியமேடு பகுதியைச் சோ்ந்த பழ வியாபாரி வேலு. இவரிடம் பம்மல் பகுதியைச் சோ்ந்த கலா என்பவா் ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இந்த கடனை, கலா திரும்பக் கொடுக்காததால், கடந்த 2013-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தனது கடைக்கு வந்த கலாவிடம், வேலு கடனைத் திரும்பக் கேட்டுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அங்கு வந்த கலாவின் ஆதரவாளா்கள் வேலுவைக் கொலை செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பெரியமேடு போலீஸாா், கலா, வாணி, அருண், சதீஷ், ஜெய், முகமது மசூத் மற்றும் சந்தோஷ் குமாா் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு சென்னை 19-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.தனசேகரன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.ராஜ்குமாா், வாணி என்பவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். மேலும், கலா உள்ளிட்ட மற்ற 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

Dinamani
www.dinamani.com