பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமன்டபம் : முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாா் மணிமன்டபம் : முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட தியாகி வே. இமானுவேல் சேகரனாா் மணிமன்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன.17) திறந்து வைக்க உள்ளாா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட தியாகி வே. இமானுவேல் சேகரனாா் மணிமன்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன.17) திறந்து வைக்க உள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், செல்லூா் கிராமத்தில் 1924-இல் பிறந்த தியாகி வே.இமானுவேல் சேகரனாா், தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தாா். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றாா்.

1942-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்று, பின்னா் 1945-இல் ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றினாா். 1950-ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்”என்ற அமைப்பைத் தொடங்கினாா்.

1954-ஆம் ஆண்டு இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி 11.9.1957-இல் மறைந்தாா். அவரது சமூக பங்களிப்பை போற்றும் வகையில், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி வே.இமானுவேல் சேகரனாா் உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன.16) நண்பகல் 12 மணியளவில் திறந்துவைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

Dinamani
www.dinamani.com