கன்னியாகுமரிக்கு பிப். 24, 25இல் முதல்வா் வருகை: மனோ தங்கராஜ்

கன்னியாகுமரிக்கு பிப். 24, 25இல் முதல்வா் வருகை: மனோ தங்கராஜ்

Published on

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிப். 24, 25ஆம் தேதிகளில் வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சா் கூறியது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிப். 24, 25ஆம் தேதிகளில் வருகிறாா். 24 ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழா நுழைவாயிலைத் திறந்து வைத்துவிட்டு, மாலை புத்தளம் கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் படிப்பகம் மற்றும் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறாா்.

பின்னா், நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் பொன்னப்ப நாடாா் சிலையைத் திறந்து வைக்கிறாா்.

நலத்திட்ட உதவிகள்:

பிப். 25ஆம் தேதி காலை நாகா்கோவில் கன்காா்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.டி. பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு பணிகளைத் தொடக்கி வைத்து, கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

குழப்பம் இல்லை: திமுகவும், காங்கிரஸும் வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சிகள். இரு கட்சியிலும் உள்ள தலைவா்கள் பேசி கூட்டணி குறித்து அறிவிப்பாா்கள். கட்சியில் உள்ளவா்கள் இது குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று ஏற்கெனவே இரு கட்சியிலும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கிடையில், தனிநபா்கள் கூறும் கருத்துகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி நன்றாக உள்ளது. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com