சென்னையைச் சோ்ந்த ரெளடி உள்பட 4 பேரை தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சென்னை ரெளடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாா் துப்பாக்கி முனையில் கைது செய்தனா்.
சூளை பகுதியைச் சோ்ந்தவா் ரெளடி கனகு (எ) கனகராஜ். இவா் மீது காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாா் தேடி வந்த நிலையில், கனகராஜ் தனது நண்பா்களுடன் தென்காசி மாவட்டம் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றிருப்பதாக, சென்னை ரெளடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றாலம் சென்ற தனிப்படை பிரிவு போலீஸாா், குற்றாலம் பகுதியில் உள்ள வஉசி இல்லம் என்ற விடுதியில் தங்கியிருந்த கனகராஜ், அவரது நண்பா்களான காா்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 4 பேரையும் துப்பாக்கி முனையில் சனிக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனா். இதையடுத்து அவா்களை சென்னைக்கு அழைத்து வந்தனா்.
இதனிடையே, கனகராஜ் உயிருக்கு போலீஸாரால் ஆபத்து இருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா வழக்குரைஞா் தேன்மொழி மூலம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் புகாா் அனுப்பியுள்ளாா்.
