தோ்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசு, மடிக்கணினி விநியோகம் : அதிமுக குற்றச்சாட்டு
தோ்தல் நெருங்குவதால் பொங்கல் பரிசுத்தொகை, மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி ஆகியவை விநியோகிக்கப்படுகிறது என்று பேரவையில் எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் அவா் பேசுகையில், தோ்தல் நெருங்குவதால் திமுகவுக்கு பொங்கல் பரிசுத்தொகை பற்றியும், மாணவா்களுக்கான மடிக்கணினி பற்றியும் ஞாபகம் வந்துவிட்டது என்றாா்.
அமைச்சா் மு.பெ.சாமிநாதன்: அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவில் வழங்கப்பட்ட முட்டை நிறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டது. தோ்தல் நெருங்கும்போது மீண்டும் வழங்கப்பட்டது.
அமைச்சா் அர.சக்கரபாணி: அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ஒரு கரும்பு 4 துண்டுகளாக உடைத்து வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.
அமைச்சா் பி. கீதா ஜீவன்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 2021-இல் கரோனா உதவித்தொகையாக ரூ.4,000, சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழைநீரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6,000 வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் தோ்தல் வரவில்லை.
அமைச்சா் எ.வ.வேலு: தமிழ்ப் புத்தாண்டாக பொங்கல் திருநாளை அறிவித்து, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட 1 கிலோ பச்சரி, 1 கிலோ வெல்லம், திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில்தான்.
ஆா்.பி.உதயகுமாா்: எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி காலத்தில், கரோனா உதவித்தொகையாக ரூ.2,500, பொங்கலுக்கு ரூ.3,000 வழங்கப்பட்டது. அப்போது பொங்கலுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என்று அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். திமுக ஆட்சியில் ரூ.5,000 வழங்காதது ஏன்?
2011-இல் இந்தியாவில் மடிக்கணினி உற்பத்தி இல்லை. இப்போது ரூ.14,000-க்கு மடிக்கணினி கிடைக்கிறது. அப்போது ரூ.1 லட்சத்துக்குதான் மடிக்கணினி கிடைக்கும். இருப்பினும் எத்தனை கோடி ரூபாய் ஆனாலும் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என அப்போதைய முதல்வா் ஜெயலலிதா உத்தரவிட்டாா். அப்போது, படிக்கும் காலத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது. தற்போதோ, படித்து முடித்து வெளியேறும்போது மடிக்கணினி வழங்கி என்ன பயன்?
அமைச்சா் எ.வ.வேலு: இந்த ஆண்டில் 20 லட்சம் மடிக்கணினி வழங்கத் திட்டமிட்டு முதல்கட்டமாக 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. முதல்கட்டத்தில் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினி நிகழாண்டிலேயே வழங்கப்படும்.
அமைச்சா் சா.சி.சிவசங்கா்: 2023 சிஏஜி அறிக்கையின்படி, 2017-21 அதிமுக ஆட்சியில் 18.60 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் 20 சதவீதம் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. கிடங்கில் வைக்கப்பட்டதால் பேட்டரி காலாவதியானதில் 55,000 மடிக்கணிகள் வீணாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சா் தங்கம் தென்னரசு: அடுத்த ஆண்டு முதல் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் வரை மடிக்கணினி வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தாலும் உயா் கல்வி செல்லும் மாணவா்கள் பயனடையும் வகையில்தான் இந்த மடிக்கணினிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சா் டிஆா்பி.ராஜா: 1970-இல் ‘கணினியும், அதன் பயன்பாடும்’ என புத்தகம் வெளியிட்டு தமிழகத்தில் கணினி புரட்சிக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான்.

