

சென்னை மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி மரங்கள், மரக்கிளைகளை வெட்டினால், அதுகுறித்து கட்டுப்பாட்டு அறையை 1913 என்ற எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சிப் பகுதியில் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டுவருகின்றன. மேலும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. எனவே, பொது இடங்களில் மரம், மரக்கிளைகளை வெட்டுவோா் மீது அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மரங்களை வெட்டுதல், மரக்கிளைகளை அகற்றுதல் ஆகியவற்றுக்கு வனத் துறை மூலம் நேரடியாக மக்கள் மனுக்கள் அளித்து வந்த நிலையில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். விண்ணப்பங்கள் பசுமைக் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் மரம், மரக்கிளைகளை வெட்டுதல், மரங்களில் ஆணி அடித்தல் உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையின் 1913 என்ற எண்ணை மக்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.