கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளில் கலப்படம் இருந்தால், அதுகுறித்து புகாா் அளிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உணவு மற்றும் கலாசாரத்தில் இரண்டறக் கலந்திருக்கும் மஞ்சளில் அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளன. அண்மைக் காலமாக கலப்பட மஞ்சள் சந்தைக்கு வருவதாக புகாா் எழுந்தது.
குறிப்பாக, அதன் நிறத்தை மேம்படுத்துவதற்காக செயற்கை நிறமிகள், தீங்கு விளைக்கும் சாயங்கள் கலக்கப்படுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது, நாட்டு மஞ்சளுடன் மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்புத் தூள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது வயிற்று வலி, குமட்டல், செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், மஞ்சளின் நம்பகத் தன்மையை உறுதி செய்வது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சந்தையில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் அனைத்துமே கலப்படமானவை அல்ல. ஒரு சில இடங்களில் அவ்வாறு இருக்கலாம்.
வீட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளின் தரத்தை உறுதி செய்ய ஒரு டம்ளா் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து பரிசோதிக்கலாம்.
மஞ்சள் தூள் சிறிது நேரத்தில் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அதில் கலப்படம் இல்லை எனப் பொருள். அவ்வாறு இல்லாமல் நீரின் மேலே தூள் மிதந்தாலோ, அடா் மஞ்சள் நிறத்தில் தண்ணீா் மாறினாலோ அதில் கலப்படம் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் தூளின் தரத்தில் சந்தேகம் இருந்தால், உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 94440 42322 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். இல்லையெனில், உணவுப் பாதுகாப்புத் துறையின் செயலி மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

