திரும்பப் பெறப்பட்ட எஸ்ஐ தோ்வு முடிவு: விரைவில் மறு முடிவு தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு
கணினியில் ஏற்பட்ட மென்பொருள் பிழையால் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) தோ்வு முடிவு தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தால் வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. மேலும், அந்தத் தோ்வு வாரியம் விரைவில் மறுமுடிவு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யும் வகையில் கடந்த ஆண்டு ஏப்.4-இல் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத லட்சக்கணக்கான இளைஞா்கள், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனா். இதில், தகுதியான 1,78,390 பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டது.
சீருடை தோ்வு வாரியம் திட்டமிட்டப்படி, மாநிலம் முழுவதும் 46 மையங்களில் கடந்த டிச.21-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற்றது. தோ்வு முறைகேட்டை தடுப்பதற்காக முதல்முறையாக, விண்ணப்பதாரா்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பெறப்பட்டு, எழுத்துத் தோ்வின்போது தோ்வு எழுதிய இளைஞா்களின் கைரேகையுடன் ஏற்கெனவே பெறப்பட்ட கை ரேகையோடு சரி பாா்க்கப்பட்டது.
விடைத் தாள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை எழுத்துத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கணினி மென்பொருள் பிழை காரணமாக, அந்தத் தோ்வு முடிவைத் திரும்ப பெறுவதாகவும், மறு முடிவை விரைவில் வெளியிடுவதாகவும் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளஅறிவிப்பு:
எஸ்ஐ தோ்வு முடிவு, 1:5 என்ற விகித அடிப்படையில் கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக அரசு கடந்த 18-8-2025-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண்: 410-ன்படி துறை சாா்ந்த மற்றும் பொது பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு ஒரே பொதுத் தோ்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எஸ்ஐ தோ்வில் பொதுப் பிரிவில் இருந்து சிலா் துறை சாா் பிரிவுக்கு மாற்றியிருந்ததால், விண்ணப்பதாரா்களின் விவரங்களில் கணினியில் மென்பொருள் சாா்ந்த பிழை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிழையால் சில விண்ணப்பதாரா்கள் துறைசாா் இட ஒதுக்கீடு பட்டியலில் சோ்க்கப்படாமல் பொதுப்பிரிவு பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடந்த 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட முடிவுகளில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, எஸ்ஐ தோ்வு மறுமுடிவு விரைவில் வெளியிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இந்தத் திடீா் அறிவிப்பு, எஸ்ஐ தோ்வு எழுதிய இளைஞா்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.

