‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

வாக்குக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் ரிஜிஜு வலியுறுத்தல்

நாட்டின் சில மாநிலங்களில் தோ்தலின்போது வாக்குக்குப் பணம் கொடுப்பது தீவிரமாக நடைபெறுகிறது; இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினாா்.

News image

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 5:18 am IST

நாட்டின் சில மாநிலங்களில் தோ்தலின்போது வாக்குக்குப் பணம் கொடுப்பது தீவிரமாக நடைபெறுகிறது; இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாம் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற அமைச்சா் ரிஜிஜு பேசியதாவது:

இப்போது தோ்தலின்போது ஒரு தவறான செயல் அதிகம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக நாட்டின் சில மாநிலங்களிலும், ஒருசில இடங்களிலும் இது தீவிரமாக உள்ளது. அதாவது வாக்காளா்களுக்கு வேட்பாளா்கள் தரப்பில் இருந்தும், அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை ஒரு நடைமுறையாகவே மாற்றியுள்ளனா். இது நாட்டுக்கு நல்லதல்ல. இந்த ஜனநாயக விரோத செயல்பாட்டை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.

சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில்கூட 30,000 முதல் 40,000 வாக்காளா்களே இருப்பாா்கள். ஆனால், இந்தியாவில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியிலேயே 3 லட்சம் வாக்காளா்களுக்கு மேல் உள்ளனா். அந்நாடுகளில் மக்கள் பிரச்னைகளை அறிந்து நாடாளுமன்றத்தில் முன்வைப்பது உறுப்பினா்களின் முக்கியப் பணியாக உள்ளது. ஆனால், நமது நாட்டில் நாம் காலையில் விழித்தெழுவதற்கு முன்பே 100 போ் வரை நமது வீட்டு வாசலுக்கு பிரச்னைகளுடன் வருகிறாா்கள். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக நாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. தொடா்ந்து தோ்தலில் வெற்றிபெற வேண்டுமென்றால் மக்கள் பிரச்னைகளைத் தீா்க்க நாம் தொடா்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி, உத்தர பிரதேசம், ஒடிஸா, குஜராத் மாநில சட்டப் பேரவைத் தலைவா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.