நற்செயல்கள் மூலம் கிரகங்களைச் சாந்தப்படுத்தலாம். இந்தப் பிறவியின் நற்செயல்கள், முந்தைய பிறவிகளின் பாவங்களுக்கு ஈடுசெய்யும். ஒரு கிரகம் ஆளும் பகுதியில் ஒரு நற்செயலைச் செய்வதன் மூலம் அதை மகிழ்விக்கலாம்.
கிரகங்களைச் சாந்தப்படுத்த செய்ய வேண்டியவை..
சூரியனை மகிழ்விக்க, கோயிலுக்குச் செல்லலாம் அல்லது கோயிலுக்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம் அல்லது கோயிலின் நிர்வாகத்தில் உதவலாம்.
சந்திரனை மகிழ்விக்க, இசை நிறுவனத்திற்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம் அல்லது தாய்மை அடைந்த வறுமையில் வாடும் பெண்ணுக்கு உதவலாம்.
செவ்வாயை மகிழ்விக்க, உடற்பயிற்சியில் ஈடுபடலாம் அல்லது பள்ளி உடற்பயிற்சிக் கூடத்திற்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம்.
புதனை மகிழ்விக்க,அறிஞர்களின் அமைப்புக்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம் அல்லது நல்ல அறிஞர்களிடமிருந்து ஆசிகளைப் பெறலாம்.
வியாழனை மகிழ்விக்க, கற்றறிந்த பிராமணரையோ அல்லது புரோகிதரையோ மதித்து அவர்களுக்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம். அல்லது தொண்டு நிறுவனத்திற்குப் பசுக்களை நன்கொடையாக வழங்கலாம் அல்லது பூசாரிக்குப் பசுக்களைத் தானமாக வழங்கலாம்.
சுக்கிரனை மகிழ்விக்க, கவிதை வாசிக்கலாம் அல்லது கவிஞருக்கு உதவலாம்.
சனியை மகிழ்விக்க, சில உடல் உழைப்பு வேலைகளைச் செய்யலாம் அல்லது உடல் உழைப்பில் வாழும் சிலருக்கு உதவலாம்.
ராகுவை மகிழ்விக்க, ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பணம் நன்கொடையாக வழங்கலாம் அல்லது புனித யாத்திரை செல்லலாம்.
கேதுவை மகிழ்விக்க, தியானம் செய்யலாம்.
கிரகங்களைச் சாந்தப்படுத்த தானம் செய்யவேண்டிய தானியங்கள்
சூரியன் - கோதுமை
சந்திரன் - அரிசி
செவ்வாய் - துவரம் பருப்பு
புதன் - பாசிப்பயறு
வியாழன் - கொண்டைக்கடலை
சுக்கிரன் - வெண்மை நிறத் தானியம்
சனி - எள்
ராகு - கருப்பு உளுந்து
கேது - கொள்ளு
உதாரணமாக, வியாழக்கிழமை காலையில் கொண்டைக் கடலையை தானம் செய்வதன் மூலம் ஒருவர் வியாழனை மகிழ்விக்கலாம்.
விரதம் இருப்பதும் ஒரு பரிகார முறைதான். உணவு எனும் அடிப்படைத் தேவையை மறுப்பதன் மூலம் நம்மை நாமே தண்டித்துக் கொள்ளும்போது, மற்ற தண்டனைகளைக் குறைத்துக் கொள்கிறோம்.
கிரகங்களை வழிபடுதல்
மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் உச்சரிப்பதன் மூலம் நாம் கிரகங்களை வழிபடலாம். மந்திரம் என்பது நமக்குள்ளே நன்மை பயக்கும் ஆன்மிக அலைகளை உருவாக்கும் சிறப்புச் சக்தி கொண்ட ஒலிகளின் தொகுப்பாகும்.
ஒரு மந்திரத்தைச் சரியான உச்சரிப்பு மற்றும் தொனியுடன் உச்சரிக்க வேண்டும். சில மந்திரங்களுக்குத் தொனி கிடையாது, ஆனால் ஒலிகளின் உச்சரிப்பு கச்சிதமாக இருக்க வேண்டும். சில சாத்விக மந்திரங்கள் சுய திருத்தம் கொண்டவை; அதாவது, அதை வாசிப்பவர் காலப்போக்கில் சரியான உச்சரிப்பையும் தொனியையும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார். வேறு சில மந்திரங்கள் தவறான உச்சரிப்பால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே மந்திரங்களின் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம், மக்கள் "மந்திரம்" என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் பல ஸ்தோத்திரங்களை மந்திரங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஸ்தோத்திரங்கள் என்பவை கிரகங்களையும் கடவுளையும் போற்றும் துதிகளாகும். ஒரு ஸ்தோத்திரத்தை வாசிப்பதற்குச் சரியான தொனி கிடையாது, மேலும் ஒரு ஸ்தோத்திரத்தை உச்சரிக்கும்போது பக்தி முக்கியமானது. ஸ்தோத்திரத்தை உச்சரிப்பது மிக மெதுவாகவே பலன்களைத் தரும்.
ஆர்வமுள்ள வாசகர்கள் தினமும் பல்வேறு கிரகங்களின் 108 பெயர்களைப் படிக்கலாம். ஜாதகத்தில் லக்னம் மிக முக்கியமான வீடாக இருப்பதாலும், லக்னாதிபதி அந்த ஜாதகத்தின் உயிர்ச்சக்தியைக் காட்டுவதாலும், ஒருவர் தனது வாழ்க்கையின் எந்தப் பகுதியை மேம்படுத்த விரும்புகிறாரோ, அந்தப் பகுதியைக் குறிக்கும் லக்னத்திற்கு அதிபதியான கிரகத்தை வழிபடலாம்.
உதாரணமாக, ஒருவர் ஆன்மிக முன்னேற்றத்தை விரும்பினால், D-20-ல் உள்ள லக்னாதிபதியை வழிபட வேண்டும். ஒருவர் இன்பங்களையும் சுகங்களையும் விரும்பினால், D-16-ல் உள்ள லக்னாதிபதியை வழிபட வேண்டும்.
கிரகங்களைச் சாந்தப்படுத்த பல்வேறு மந்திரங்கள் உள்ளன. மேலும், கவசங்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் அனைத்து கிரகங்களுக்கும் 108 பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய ஒரு பிரபலமான மந்திரம் உள்ளது.
ஒரு கிரகத்திற்கு அதிபதியான வார நாளே அதன் மந்திரத்தைத் திரும்பத்திரும்பச் சொல்வதற்கு உகந்தது.
கிரகங்களை நேரடியாக வழிபடுவதற்குப் பதிலாக, நாம் அதிபதி தெய்வங்களை வழிபடலாம். ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் லக்னாதிபதிக்குரிய தெய்வத்தை வழிபடுவது, அந்த ஜாதகம் காட்டும் வாழ்க்கைத் துறையில் சிறந்த பலன்களைத் தரும்.
பிறப்பு / நியம ஜாதகத்தில், அதிக பாகை பெற்ற ஒரு கிரகத்திற்கு /ஆத்ம காரக கிரகத்திலிருந்து 12-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும், அதிபதியாக இருக்கும் அல்லது அதைப் பார்க்கும் வலிமையான கிரகத்திற்குரிய தெய்வத்தை வழிபடுவது, ஒருவரின் ஆன்மாவை முக்திக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும்.
புதனும் சனியும் பொதுவாக ஒரு வைஷ்ணவ தெய்வத்தைக் குறிக்கின்றன. சூரியன் ஒரு சைவ தெய்வத்தைக் குறிக்கிறது. சந்திரனும் சுக்கிரனும் ஒரு தேவியைக் குறிக்கின்றன. செவ்வாய் ஒரு உக்கிரமான வடிவத்தைக் குறிக்கிறது. ராகு ஒரு ஆக்ரோஷமான தெய்வத்தைக் குறிக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரக சேர்க்கைகளின் அடிப்படையில், நாம் சரியான தெய்வத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
கிரகம் தெய்வம்
சூரியன் சிவன் / ராமன்
சந்திரன் கௌரி / லலிதா / சரஸ்வதி / கிருஷ்ணா
செவ்வாய் ஹனுமான் / ருத்திரன் / கார்த்திகேயன் / நரசிம்மன்
புதன் விஷ்ணு / நாராயணன் / புத்தா
குரு ஹயக்ரீவா / தத்தாத்ரேயா / ஏதேனும் ஒரு குரு
சுக்கிரன் லட்சுமி பார்வதி
சனி விஷ்ணு / பிரம்மா
ராகு துர்கா / நரசிம்ஹா
கேது கணேசன்
உதாரணமாக, ஒரு ஜாதகத்தில் நாம் ராகுவை மகிழ்விக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். செவ்வாயும் ராகுவும் மேஷ ராசியிலிருந்து, சனியும் புதனும் அவற்றைப் பார்க்கின்றன என்று வைத்துக்கொள்வோம். ராகு துர்க்கையைக் குறிக்கலாம், ஆனால் சனி மற்றும் புதனின் தாக்கம் ஒரு வைஷ்ணவ தெய்வத்தைக் குறிக்கிறது. ராகுவின் மீது செவ்வாயின் தாக்கம் கோபமான தெய்வத்தைக் காட்டுகிறது.
எனவே, ராகுவை மகிழ்விக்க, விஷ்ணுவின் கோபமான வடிவமான "உக்கிர நரசிம்மரை" வழிபடலாம். மற்றொரு ஜாதகத்தில், கடக ராசியில் உள்ள ராகு துர்க்கையைக் குறிக்கலாம். இன்னொரு உதாரணத்தில், செவ்வாய் அனைத்து வர்க்கங்களிலும் ஒரு உக்கிரமான ராசியிலிருந்து, புதன் அதனுடன் சேரும்போது அது "ஜ்வால நரசிம்மரைக்" காட்டலாம்.
மற்றொரு ஜாதகத்தில், ராகுவுடன் (பாம்பு) செவ்வாய் சேர்ந்திருந்தால் சுப்ரமணியர் (கார்த்திகேயன்) தோன்றலாம். சனியின் தாக்கத்துடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் அனுமன் தோன்றலாம், ஏனெனில் சனி வைஷ்ணவ தெய்வத்தைக் குறிக்கிறது, மேலும் அனுமன் பணிவையும் சேவகரின் குணத்தையும் கொண்டவர்.
கொடுக்கப்பட்டுள்ளவை வெறும் வழிகாட்டுதல்கள். இதனை அறிவதற்குத் தக்க ஜோதிடரை நாடுதல் அவசியம். மேலும், மந்திர உச்சாடனுமும் அவசியம். ஸ்தோத்திரத்தைப் படிக்கும்போது பக்தி மிகவும் முக்கியமானது. மந்திரத்தைப் படிக்கும்போது, பக்தியும் சரியான உச்சரிப்பும் முக்கியமானவை.
"ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும்... அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல... "பரிகாரம்", என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்..."
தொடர்புக்கு : WA 98407 17857, 91502 75369
Summary
Planets can be appeased through good deeds. Good deeds performed in this lifetime can atone for the sins of past lives. A planet can be pleased by performing a good deed associated with its domain.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










