ஜோதிமணி பாண்டியன்
தமிழர் பண்பாட்டில் ஆபரணங்கள் அழகுக்காக மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்காகவும், தத்துவார்த்த குறியீடுகளின் அடிப்படையிலுமே அணியப்பட்டன. தலை முதல் கால் வரை ஒவ்வொரு உறுப்புக்கும் பிரத்யேக நகைகளை முன்னோர் வடிவமைத்தனர். அவற்றுள் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புறப் பெண்களின் அடையாளமாக விளங்கிய தனித்துவமான காதணியே "தண்டட்டி' ஆகும்.
சங்க இலக்கியங்களில் "கனமான பொற்குழை', "செவி துளை பெருக்கல்', "திண்காழ் காதணி' ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படுவது இன்றைய தண்டட்டி, பாம்படம் போன்ற காதணிகளே. தமிழ்த் திரைப்படங்களில் "தண்டட்டி' என்பது வெறும் ஒரு நகையாக மட்டுமல்லாமல், கிராமத்துத் தனம், தாய்மை, பாரம்பரியம், பாச உணர்வு மற்றும் வயதான பாட்டி கதாபாத்திரங்களின் அடையாளமாகவே பல கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"தண்டட்டி' என்பது தங்கம், அரக்கு கொண்டு செய்யப்படும் கனமான காதணியாகும். இது பார்ப்பதற்குச் சதுரம், முக்கோணம், உருண்டை போன்ற பல்வேறு வடிவியல் வடிவங்களின் கூட்டு அமைப்பாகக் காட்சியளிக்கும். இது "தண்டையட்டி' என்பதன் மருவலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காதைத் தண்டித்து (வளர்த்து) அணிவதால் இந்தப் பெயர் பெற்றது என்றும் கூறப்படுவதுண்டு.
இதன் உள்பகுதியில் அரக்கு நிரப்பப்பட்டு, வெளிப்பகுதியில் மெல்லிய தங்கத் தகடு போர்த்தப்பட்டிருக்கும். இதில் முப்பரிமாண வடிவில் முக்கோணக் கூம்புகள் அமைக்கப்பட்டிருக்கும். தண்டட்டியுடன் சேர்த்து "பாம்படம்', "முருகு', "மேல்காது முருகு', "கந்தூரி' போன்ற பிற காதணிகளையும் பெண்கள் அடுக்கடுக்காக அணிவது வழக்கம்.
தண்டட்டி அணிய வேண்டுமெனில், காது மடலின் துளை சாதாரணத்தைவிடப் பெரியதாக இருக்க வேண்டும். இதற்காகவே கிராமங்களில் "காது வளர்த்தல்' என்றொரு நீண்ட காலப் பாரம்பரிய முறை பின்பற்றப்பட்டது.
அணிவது எப்படி?
பெண் குழந்தைகளுக்கு 1 முதல் 3 வயதுக்குள் கிராமத்து மருத்துவர்கள் அல்லது அனுபவமிக்க பெரியவர்கள் முள் அல்லது மெல்லிய கம்பியைக் கொண்டு காது குத்துவார்கள்.
காது குத்தியவுடன் பூண்டுப்பல் அல்லது சீவக்காய்த் தடியைச் செதுக்கி காதுத் துளையினுள் வைப்பார்கள். காதுத் துளை காய்ந்ததும், வேப்பங்குச்சி அல்லது எருக்கங்குச்சியை வைப்பார்கள். இது கிருமிநாசினியாகச் செயல்பட்டு புண்ணை ஆற்றும்.
துளை ஓரளவு பெரிதானதும், "ஈய வளை' எனப்படும் ஈயத்தால் ஆன சிறிய வளையங்களைக் காதில் தொங்கவிடுவார்கள். முதலில் ஒரு வளையம் மாட்டப்படும். காதுத் தசை அதைத் தாங்கியவுடன், அடுத்தடுத்து வளையங்களின் எண்ணிக்கை கூட்டப்படும்.
சில பெண்களுக்குக் காதில் 10 முதல் 20 ஈய வளையங்கள் வரை தொங்கும். இந்த எடையின் காரணமாகக் காது மடல் மெல்ல மெல்ல கீழ்நோக்கி இழுபட்டு, துளை பெரியதாகும். காது மடல் தோள்பட்டையைத் தொடும் அளவுக்கு நீண்ட பிறகுதான், திருமண வயதில் அவர்களுக்குப் பாரம்பரிய "தண்டட்டி' அணிவிக்கப்படும்.
நன்மைகள்
தண்டட்டி அணிவதால் நரம்பு மண்டலத் தூண்டலும், மன அமைதியும் ஏற்படும். காதின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் தொடர் அழுத்தம், உடலின் ரத்த ஓட்டத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது. பெண்களின் கண் பார்வைத் திறன் வயதான காலத்திலும் மங்காமல் பாதுகாக்கப்பட்டது.
பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளோடு தொடர்புடைய நரம்புகள் காது மடலில் கடந்து செல்வதால், தண்டட்டியின் மிதமான எடையானது அந்த நரம்புகளைத் தூண்டி, ஹார்மோன் குறைபாடுகளைக் களைந்து, மாதவிடாய் சுழற்சியைச் சீராக்க உதவியது.
குடும்பப் பெருமை
தண்டட்டி அணிவது என்பது வெறும் ஆரோக்கியம் சார்ந்தது மட்டுமல்ல. அது ஒரு பெண்ணின் சமூக அந்தஸ்தையும் காட்டியது. ஒரு பெண் அணிந்திருக்கும் தண்டட்டியின் எடை, தங்க அளவை வைத்து அவளது குடும்பத்தின் பொருளாதார நிலை மதிப்பிடப்பட்டது.
தண்டட்டி பாரம்பரியம் மறைந்து வரும் காலம்
கடந்த 30-40 ஆண்டுகளில் தண்டட்டி அணிவது முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறைப் பெண்கள் கனமான நகைகளை அணிவதை விரும்புவதில்லை. தண்டட்டி அணிந்த மூதாட்டிகளைத் தாக்கி, காதை அறுத்து நகையைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்தன. இதனால் பலர் தங்கள் தண்டட்டிகளைக் கழற்றி விற்றுவிட்டனர் அல்லது லாக்கரில் பூட்டி வைத்தனர். இந்த நகையைச் செய்ய அதிக உழைப்பும் நுணுக்கமும் தேவைப்படுவதால், நகை வியாபாரிகள் இதைச் செய்வதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?
தகரும் ஊழல் கோட்டைகள்!

நல்லன எல்லாம் தரும் கடல்!

நீட் மட்டுமல்ல ஒரு தேர்வையும் விட்டு வைக்காத குஜராத் கும்பல்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



