பொ. ஜெயச்சந்திரன்
கடலுக்கு "முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் "முந்நீர்' என்ற சொல் வருகிறது. நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் "முந்நீர்' என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே, கடலின் அழிவு சக்தி குறித்தும் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான். பல சங்கப் பாடல்கள் சுனாமிக்கு காரணமான நில அதிர்ச்சி குறித்தும், கடல் எல்லை மீறுவது குறித்தும் பொதுவாகப் பாடுகின்றன.
இலக்கியங்கள் பலவற்றில் கடல் மிக முக்கியமானதாகப் பேசப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த பகுதியும் ஆகும். "வருணன் மேயப் பெருமணல் உலகமும்' என தொல்காப்பியம் எழுதிச் செல்கிறது. "பெருமணல் உலகம்' எனத் தொல்காப்பியம் குறிப்பது கடல் சார்ந்த பகுதியைத்தான்.
சங்க இலக்கியத்தில் முத்துகள் குறித்துப் பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில் முத்துச்சலாபம் (முத்துக் குளித்தல்) பாண்டிய நாட்டில் மிகுதியாக நடந்தது. பாண்டிய நாட்டில் விளைந்த முத்துகள் உலகப் புகழ்பெற்று விளங்கின. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஒரு சிறிய கிராமமே கொற்கை. கொற்கைத் துறையின் கடல் நீரில் முத்துகள் விளையும் என்பதை நற்றிணையும் ஐந்குறுநூறும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் செய்திகளிலிருந்து பரதவர் முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல் போன்ற தீரமிக்கச் செயல்களிலும் கடல் சார்ந்த வணிகங்களிலும் சிறந்தோங்கினர் என்பது தெளிவாகிறது.
கண்ட எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள பெருங்கடல் பகுதியைக் கண்டத் திட்டு என்கிறோம். கண்டத் திட்டு 150 மீட்டரிலிருந்து 200 மீட்டர் ஆழம் வரை காணப்படும். அது போலவே அதன் அகலமும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. அகன்ற கண்டத் திட்டுகள் மிகச் சிறந்த மீன்பிடித்தளங்களாகும். ஏனெனில், இந்தப் பகுதி பிளாங்டன்கள் செழித்து வளரத் தேவையான சூழலைக் கொண்டிருக்கிறது. இந்த பிளாங்டன்கள் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. ஆதலால், கண்டத் திட்டுகளில் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன.
பெருங்கடல் அகழியில் மலைத்தொடர்கள், பீடபூமிகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளி ஆகியன அமைந்துள்ளன. இவை பெருங்கடல் அகழியின் மொத்த பரப்பில் 40 சதவீதமாகும். பெருங்கடல்களில் வெகு ஆழத்தில் அகழிகள் தோன்றுகின்றன. அவை மிக குறுகலாகவும், ஆழமாகவும் இருப்பவை; அத்தகைய அகழிகள் பசிபிக் பெருங்கடலில் ஏராளமாக காணப்படுகின்றன. அவற்றுள் மரியானா அகழி உலகிலேயே மிக ஆழமானது என அறியப்படுகிறது.
பசுமை நிறைந்த காடுகளைப் போலவே கடலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாக பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகின்றன.
ஸ்பைருலினா பாசியில் புரதம் முதலான சத்துகள் அதிகம்; எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சக்தியை அளிப்பதாகவும், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க இது உதவுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கிப்னியா நிடிபிகா என்னும் கடல் பாசி பல வகையான வயிற்றுத் தொல்லைகளுக்கும், தலைவலிக்கும் மருந்தாகின்றன. துர்வில்லியா என்னும் கடல்பாசி தோல் நோயைக் குணப்படுத்துகிறது. பொதுவாக கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கும் மிக அதிகம். சரியான அளவில் தைராய்டு சத்து இல்லை எனில் கருத்தரிப்பு நிச்சயம் தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு அகார் என்னும் வெண்ணிறக் கடல் பாசி சேர்ப்பது தைராய்டு சுரப்பியை சீராக்க உதவும்.
மக்களுக்கு உணவு, காலநிலை சமநிலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வளங்களை வழங்கும் இயற்கையின் அரிய கொடையாக கடல் திகழ்கிறது. இந்த கடலோடு வாழ்வையும், வாழ்க்கையும் இணைத்துக் கொண்டிருப்பவர்கள் கடலோர மீனவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கடலையே சார்ந்துள்ளது. மீன்பிடித் தொழில் என்பது உலகின் மிகப் பழைமையான தொழில்களில் ஒன்றாகும்.
மீனவர்கள் கடலின் காவலர்களாகவும், திகழ்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக கடலுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கடலின் தன்மையும், அதன் மாற்றங்களையும் நன்கு அறிந்தவர்கள். எனவே, கடல் பாதுகாப்பு முயற்சிகளில் மீனவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அவர்களின் பாரம்பரிய அறிவும், அனுபவமும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்த உதவும்.
கடலைப் பாதுகாப்பது என்பது மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்குச் சமமானதாகும். மீனவர்களின் வாழ்க்கை எளிதானதல்ல. காலநிலை மாற்றம், கடல் மாசுபாடு, புயல், கடல் அரிப்பு, மீன் வளங்கள் குறைவு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கடற்கரைகளில் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பது, ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது போன்ற சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும்.
கடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மீனவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். மீனவர்கள் வளமாக இருந்தால்தான் கடலோர சமூகங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். எனவே, கடலைக் காப்போம், மீனவர்களை வாழ்விப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







