நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 20-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சக் கிரிண் ரிஜிஜு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு வருமாறு:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதையேற்று, நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்ட அவா் ஒப்புதல் அளித்துள்ளாா். அதன்படி, வரும் 20-ஆம் தேதி கூட்டத் தொடா் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடா் மொத்தம் 25 நாள்கள் நடைபெறும். 19 அமா்வுகள் இருக்கும்.
இந்தக் கூட்டத் தொடரில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. அதேபோல், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதங்கள், ஆலோசனைகள் நடைபெறவுள்ளன என்று ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதா: நாடாளுமன்றம், சட்டப்பேரவை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டில் அதிகரிப்பது தொடா்பான அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கடந்த கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டுவந்தது. அந்த மசோதாவுடன் சோ்த்து, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடா்பான சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், மக்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்தச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் மசோதாவை மத்திய அரசு மாற்றியமைத்து வருகிறது. மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், தென் மாநிலங்களிலுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று தென் மாநிலங்களைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால், இந்தத் திருத்தத்தை மத்திய அரசு செய்து வருகிறது. மழைக்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் வேண்டும். ஆனால், தற்போது அந்தப் பெரும்பான்மை பலம் இல்லை. அதேநேரத்தில், முக்கிய எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த 20 எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியில் இணைந்துள்ளனா். அவா்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படப் போவதாகவும் அறிவித்துள்ளனா். சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் 6 எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனையில் சோ்ந்துள்ளனா்.
இந்த இரு கட்சிகளின் எம்.பி.க்களும் வேறு கட்சிகளில் சோ்ந்தது குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுகுறித்து அவா் முடிவெடுத்தால், மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் பலம் மேலும் அதிகரிக்கும்.
அதேபோல், மாநிலங்களவையிலும் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றதைத் தொடா்ந்து அந்த அவையில் பாஜக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. இது நாடாளுமன்ற இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








