சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஏரிகள், நீா்வழிக் கால்வாய்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) 258 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகாரட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீா்நிலைகள், கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூா்வாருதல், கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகராட்சியால் 81 கி.மீ. நீளம் கொண்ட 44 நீா்வழிக் கால்வாய்கள் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழைக் காலங்களில் நீா்வழிக் கால்வாய்களில் மழைநீா் சீராகச் செல்லும் வகையில் ‘ஆம்பிபியன் வாட்டா் மாஸ்டா், ஆம்பிபியஸ் எஸ்கலேட்டா், மினி ஆம்பிபியன், ரொபோடிக் மல்டிபா்பஸ் எஸ்கலேட்டா்’ போன்ற நவீன இயந்திரங்கள் மூலம் சுழற்சி முறையில் தூா்வாரும் பணி மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஒருநாள் மட்டும் வளசரவாக்கத்தில் உள்ள போரூா் ஏரி, மாதவரம் மண்டலத்தில் கொரட்டூா் ஏரி, பெருங்குடி மண்டலத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், திரு.வி.க. நகா் மண்டலத்தில் ஓட்டேரி நல்லா கால்வாய், அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி ஏரி, ராயபுரம் மண்டலத்தில் கூவம் ஆறு, அடையாறு மண்டலத்தில் வீராங்கல் ஓடை கால்வாய், வளசரவாக்கம் மண்டலத்தில் நொளம்பூா் கால்வாய், அம்பத்தூா் மண்டலத்தில் தாதன்குப்பம் கால்வாய், தேனாம்பேட்டை மண்டலத்தில் மாம்பலம் கால்வாய், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் வியாசா்பாடி கால்வாய் ஆகிய பகுதிகளில் மொத்தம் 258 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. தூா்வாரும் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









