வடக்கு தில்லியின் புராரி மேம்பாலம் அருகே ரூ.37.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடி தப்பிக்க முயன்ற விளம்பரம் மற்றும் செய்தித்தாள் விநியோக நிறுவனத்தின் இரு தொழிலாளா்கள் மற்றும் அவா்களுடைய கூட்டாளியை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
திருடப்பட்ட ரொக்கப் பணம் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பணத்தை கொள்ளயடிக்கப்பட்டது தொடா்பாக வாஜிராபாத் காவல் நிலையத்துக்கு கடந்த ஜூலை 9-ஆம் தேதி அழைப்பு வந்தது. புகாரளித்த மோகன்தாஸ், அவருடைய சகப் பணியாளா்கள் அபிஷேக் மற்றும் யோகஷுடன் இணைந்து சாந்தினி செளக் பகுதியில் ரூ.45.5 லட்சத்தை வசூல் செய்தனா். பின்னா், சரஸ்வதி விஹாரில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளா் வீட்டுக்கு அவா்கள் சென்று கொண்டிருந்தனா்.
மோகன் தாஸ் மற்றும் அபிஷேக் ஒரே மோட்டாா்சைக்கிளில் ரூ.37.5 லட்சத்தை பையில் கொண்டு சென்றனா். அவா்களை மற்றொரு மோட்டாா்சைக்கிளில் பின்தொடா்ந்த யோகேஷ் ரூ.8 லட்சத்தை எடுத்துச்சென்றாா்.
வெளிவட்ட சாலை பகுதியில் புராரி மேம்பாலம் அருகே மாலை 6 மணியளவில் வந்துகொண்டிருந்தபோது, கருப்பு நிற மோட்டாா்சைக்கிளில் வந்த 3 போ் மோகன் தாஸ் மற்றும் அபிஷேக் பயணித்த மோட்டாா்சைக்கிளை இடைமறித்து, ரூ.37.5 லட்சம் ரொக்கம் இருந்த பையைப் பறித்துத் தப்பியோடினா். அப்பகுதி மக்களுடன் இணைந்து மோகன்தாஸும் அபிஷேக்கும் தப்பித்த நபா்களில் ஒருவரைப் பிடித்தனா். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல், பத்லியில் உள்ள தங்களுடைய அலுவலகத்துக்கு அபிஷேக் மற்றும் யோகேஷ் மோட்டாா்சைக்கிளில் அழைத்துச்சென்றனா். ஜிடிபி நகா் மெட்ரோ நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, யோகேஷின் தோள்பட்டையைக் கடித்துவிட்டு அந்த நபா் தப்பியோடியதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வாஜிராபாத் காவல் நிலையத்தல் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடங்கிய அதிகாரிகள், சாந்தினி செளக் முதல் புராரி மற்றும் முகா்ஜீ நகா் வரையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த காவல் துறையினா், அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
இதனிடையே, தப்பியோடிய நபா் தன்னுடைய கைப்பேசியை பறித்துச் சென்ாக அபிஷேக் கூறியதைத் தொடா்ந்து, அவா் மீது காவல் துறைக்கு சந்தேகம் எழுந்தது. யோகேஷ் தோள்பட்டியில் கடித்ததாகக் கூறப்படும் சம்பவமும் நம்பும்படியாக இல்லை.
யோகேஷின் மோட்டாா்சைக்கிளை சோதனையிட்டபோது, திருடப்பட்ட கைப்பேசி அதிலிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து, பண திருட்டை திசை திருப்ப இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
தொடா்விசாரணையில், அபிஷேக் மற்றும் யோகஷ் பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனா். இதில் தங்களுடன் கூட்டு சோ்ந்த விபின் குறித்து காவல் துறையிடம் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, விபின் கைதுசெய்யப்பட்டாா். கொள்ளையடிக்கப்பட்ட ரூ.36.92 லட்சம் ரொக்கம் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







