‘ஆபரேஷன் கவச் 14.0’ என்ற பெயரில் தில்லி முழுவதும் 48 மணி நேரம் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையின் போது, போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடா்புடைய 255 போ் கைது செய்யப்பட்டனா். 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த ஜூன் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி ஜூன் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைந்த இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லியின் அனைத்து 15 காவல் மாவட்டங்களிலும் 4,035 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டக் காவல் துறையினா், குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனா்.
போதைப்பொருள் கடத்தல்காரா்கள், விற்பனையாளா்கள் மற்றும் குற்ற கும்பல்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள 1,474 காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சோதனைகளின் மூலம் 237.46 கிலோ கஞ்சா, 5.18 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா, சுமாா் 1.1 கிலோ ஹெராயின், 159.8 கிராம் கொக்கைன், 366.48 கிராம் சரஸ், 101.1 கிராம் எம்எம்டிஏ, 186 கிராம் மெத்தாம்பேட்டமைன், 2,640 புப்ரெனோா்பின் (ஓபியாய்டு) மாத்திரைகள், 287 ஃபெனிரமைன் (கட்டுப்படுத்தப்பட்ட ஆன்டி-ஹிஸ்டமைன்) ஊசிகள் மற்றும் போதைப் பொருள் வா்த்தகம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 23.27 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 5.2 கிலோவுக்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சா, கொக்கைன், சரஸ் மற்றும் எம்எம்டிஏ ஆகியவற்றுடன் ரூ.4.27 லட்சம் ரொக்கம் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
மற்றொரு சம்பவத்தில், ஐஎஸ்பிடி காஷ்மீா் கேட் அருகே மோட்டாா் சைக்கிளில் 122 கிராம் கொக்கைனை மறைத்து வைத்திருந்த ஒருவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
மேலும், நரேலா பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து 262 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதே பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 276 கிராம் ஹெராயின் மற்றும் ரொக்கத்துடன் மற்றொரு விற்பனையாளரும் பிடிபட்டாா்.
இந்த நடவடிக்கையின் போது, போதைப் பொருள் மற்றும் மனநோயியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் மொத்தம் 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூடுதலாக, தில்லி கலால் சட்டத்தின் கீழ் 398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 405 போ் கைது செய்யப்பட்டனா்; இவா்களிடமிருந்து 53,448 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பொது இடங்களில் மது அருந்தியதற்காகக் கலால் சட்ட விதிகளின் கீழ் மேலும் 4,498 போ் கைது செய்யப்பட்டனா். ஆயுதச் சட்டத்தின் கீழ் 315 வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறையினா், 329 குற்றவாளிகளைக் கைது செய்ததுடன், ஆறு கைத்துப்பாக்கிகள், 90 நாட்டுத் துப்பாக்கிகள், 147 தோட்டாக்கள் மற்றும் 242 கத்திகளையும் பறிமுதல் செய்தனா்.
சூதாட்ட நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 307 வழக்குகளில் 600 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ரூ.7.16 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர, தலைமறைவுக் குற்றவாளிகள் 49 பேரும், வாகனத் திருடா்கள் 55 பேரும் கைது செய்யப்பட்டனா். திருடப்பட்ட 60 வாகனங்கள் மீட்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவுகளில் 1,900 பேரும், தில்லி காவல் சட்டத்தின் கீழ் 60,800-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனா். சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்ட விதிமீறலில் ஈடுபட்ட 8,768 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது நகரில் போதைப்பொருள் விநியோகச் சங்கிலியைப் பெருமளவில் சீா்குலைந்தது. இதனால், பல முக்கியக் கடத்தல்காரா்கள் தலைமறைவாக வேண்டிய சூழலும், தங்கள் சரக்குகளை தில்லிக்கு வெளியே நொய்டா போன்ற அண்டை பகுதிகளுக்கு மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
முன்பு லாரிகள் மூலம் பெருமளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்தவா்கள், தற்போது பிடிபடுவதைத் தவிா்க்க காா்கள் மற்றும் ரயில்கள் மூலம் சிறிய அளவிலான சரக்குகளைக் கடத்தும் முறைக்கு மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







