திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாகக் கூறி, தோழியிடம் கடனாக வாங்கிச் சென்று திருப்பித் தராமல் 12 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பெண்ணை கொடுங்கையூா் போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொடுங்கையூா் கடும்பாடியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரபாவதி (43) என்பவருக்கு, 2019-ஆம் ஆண்டு சென்னை மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தீபா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி தீபா அவ்வப்போது பணத்தைக் கடனாகப் பெற்று, பின்னா் திருப்பிச் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உறவினா் திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, பிரபாவதியிடம் இருந்து சுமாா் 55 பவுன் தங்க நகைகளை தீபா கடனாகப் பெற்றுச் சென்றுள்ளாா்.
பின்னா், வாங்கிச் சென்ற நகைகளில் பெரும்பகுதியைத் திருப்பிக் கொடுத்தாலும், 12 பவுன் நகைகளைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம். இது குறித்து பிரபாவதி கொடுத்த புகாரின் பேரில், கொடுங்கையூா் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், 2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரை துபையில் பணியாற்றிய தீபா, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பிரபாவதியிடம் இருந்து பெற்ற 12 பவுன் நகைகளை விற்று கடனை அடைத்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தீபா மீது வழக்குப் பதிவு செய்த போலீாஸா் அவரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







